பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 10 பேருக்கு தனியார் பள்ளிகளில் சேர்க்கை
By DIN | Published On : 09th June 2019 12:18 AM | Last Updated : 09th June 2019 12:18 AM | அ+அ அ- |

பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற எஸ்.சி., எஸ்.டி., மாணவ, மாணவிகள் 10 பேருக்கு தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் எஸ்.சி., எஸ்.டி., மாணவ, மாணவிகள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க வைக்கும் திட்டம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 2018-19-ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற எஸ்.சி., எஸ்.டி. மாணவ, மாணவிகள் 10 பேர் 2019-20-ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் சிறந்த நற்பெயர் பெற்ற தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்து படிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 10 மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கை ஆணையை வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் சனிக்கிழமை வழங்கினார்.
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வேணுகோபால், மாணவ, மாணவிகளின் பெற்றோர் பங்கேற்றனர்.