மின் வாரிய அதிகாரிகளை கண்டித்து மறியல்
By DIN | Published On : 09th June 2019 12:10 AM | Last Updated : 09th June 2019 12:10 AM | அ+அ அ- |

நாட்டறம்பள்ளி அருகே பழுதடைந்த மின் மாற்றியைச் சீரமைக்காத மின்வாரிய அதிகாரிகளைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேட்டப்பட்டு ஊராட்சி வட்டக்கொள்ளி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் 25-க்கும் விவாசயிகள் பம்ப் செட்டு வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதிக்கு புதுப்பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் இடியுடன் கூடிய கனமழை பெய்ததில் இப்பகுதியில் உள்ள மின்மாற்றி பழுதடைந்தது. இதனால் கடந்த 15 நாள்களாக குறைந்த அழுத்த மின் விநியோகமே செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் வீடுகளில் உள்ள மின்சாதனப் பொருள்கள் இயங்கவில்லை எனவும், பம்ப் செட்டுகள் இயங்கவில்லை எனவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து புதுப்பேட்டை மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாட்டறம்பள்ளி-புதுப்பேட்டை சாலையில் வேட்டப்பட்டு இணைப்புச் சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த நகரப் பேருந்தையும் சிறைபிடித்தனர்.
தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஓரிரு நாளில் சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.