சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 14th June 2019 06:39 AM | Last Updated : 14th June 2019 06:39 AM | அ+அ அ- |

குடியாத்தம் உட்கோட்ட காவல் துறை, போக்குவரத்துப் பிரிவு காவல் துறை, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், அரிமா சங்கம் ஆகியன இணைந்து தலைக்கவசம், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி, கருத்தரங்கை வியாழக்கிழமை நடத்தின.
காமராஜர் பாலம் அருகே தொடங்கிய விழிப்புணர்வுப் பேரணிக்கு டிஎஸ்பி என்.சரவணன் தலைமை வகித்தார். இப்பேரணி அர்ச்சுன முதலி தெரு, பழைய பேருந்து நிலையம், காட்பாடி சாலை புதிய பேருந்து நிலையம் வழியாக ஹயக்ரீவ மஹாலுக்கு சென்றது.
பேரணியில் பொதுமக்கள், ஓட்டுநர்கள் விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனர். ஹயக்ரீவ மஹாலில் நடைபெற்ற கருத்தரங்குக்கு டிஎஸ்பி என்.சரவணன் தலைமை வகித்து, சாலைப் பாதுகாப்பு குறித்தும், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் எஸ்.வெங்கட்ராகவன், அரிமா சங்கத் தலைவர் எம்.கே.பொன்னம்பலம், போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் ஆ. செல்லபாண்டியன் உள்ளிட்டோர் பேசினர்.