மாடுவிடும் விழா தடுத்து நிறுத்தம்: போலீஸ் தடியடி
By DIN | Published On : 14th June 2019 06:42 AM | Last Updated : 14th June 2019 06:42 AM | அ+அ அ- |

காட்பாடி அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட மாடுவிடும் விழாவை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தகராறை அடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் மாடு விடும் விழாக்கள் நடத்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை அனுமதி வழங்கப்படுவது வழக்கம். இதற்கு வருவாய்த் துறை, போலீஸார் அனுமதி பெறுவது கட்டாயம். எனினும், பல இடங்களில் உரிய அனுமதி பெறாமல் மாடு விடும் விழாக்கள் நடத்தப்படுகின்றன.
அதன்படி, வேலூரை அடுத்த பழைய காட்பாடி பகுதியில் வியாழக்கிழமை அனுமதியின்றி மாடு விடும் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவுக்கு வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி தருமபுரி, கிருஷ்ணகிரி, சித்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டு வரப்பட்டன. காலை 8.30 மணியளவில் விழா தொடங்கியதும் மாடுகள் விடப்பட்டன.
தகவலறிந்த காட்பாடி போலீஸார் 9 மணியளவில் அப்பகுதிக்குச் சென்று மாடு விடும் விழாவைத் தடுத்து நிறுத்தினர். அனுமதியின்றி மாடு விடும் விழா நடத்துவது தவறு என்று விழாக் குழுவினரிடம் போலீஸார் தெரிவித்தனர். ஆனால், அதை ஏற்க மறுத்த இளைஞர்கள், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீஸார் லேசான தடியடி நடத்தினர். இதில், இளைஞர்கள் சிலர் காயமடைந்தனர். தொடர்ந்து மாடு விடும் விழா நடத்தாமல் இருக்க அங்கு போலீஸார் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.