"தொழிற்சாலைகளில் தீத்தடுப்பு கருவிகளை நவீனமாக்க வேண்டும்'
By DIN | Published On : 06th March 2019 12:44 AM | Last Updated : 06th March 2019 12:44 AM | அ+அ அ- |

தொழிற்சாலை நிர்வாகத்தினரும் தீத்தடுப்பு கருவிகளை நவீனமாக்க வேண்டும் என வேலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை அலுவலர் லட்சுமிநாராயணன் பேசினார்.
அரக்கோணம் அருகே உள்ள எம்ஆர்எப் தொழிற்சாலையில் தேசிய பாதுகாப்பு மாதத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் லட்சுமிநாராயணன் பங்கேற்றுப் பேசியது:
கடந்த காலங்களில் இருந்த தீத்தடுப்பு முறைகளை விட தற்போது தீத்தடுப்பு முறைகள் மிகவும் நவீனமாகியுள்ளன. அதற்கேற்ப தொழிற்சாலை நிர்வாகத்தினரும் தீத்தடுப்பு கருவிகளை நவீனமாக்க வேண்டும்.
இந்தத் தொழிற்சாலையில் உற்பத்திக்காக இல்லாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கென்று ரூ.24 கோடி மதிப்பில் கருவிகள் வாங்கப்பட்டு நிறுவப்பட்டுள்ள விஷயம் மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். தீ விபத்து ஏற்பட்டால் அப்பகுதியில் இருப்பவர்களே அங்கு இருக்கும் கருவிகளைக் கொண்டு விரைந்து செயல்பட்டு அதை அணைக்க முயற்சிக்க வேண்டும் என்றார் லட்சுமிநாராயணன்.
தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆலையின் பொது மேலாளர் கே.வி.எஸ்.ரவிபிரகாஷ் தலைமை வகித்தார். பாதுகாப்பு இயக்கக் கொடியை மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமிநாராயணன் ஏற்றி வைத்தார்.
இவ்விழாவில் ஆலை உற்பத்தி பிரிவு முதுநிலை மேலாளர் இசக்கிராஜன், பாதுகாப்புப் பிரிவு முதுநிலை மேலாளர் பஞ்சாபகேசன், மேலாளர் நந்தகுமார், மக்கள் தொடர்பு அலுவலர் ரவிகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.