வேலூரில் 100 டிகிரியை கடந்த வெயில்
By DIN | Published On : 06th March 2019 12:41 AM | Last Updated : 06th March 2019 12:41 AM | அ+அ அ- |

வேலூரில் செவ்வாய்க்கிழமை வெயில் அளவு 100 டிகிரியைக் கடந்தது.
வேலூரில் பகல் நேரங்களில் வெயில் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் இப்போதே கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்திலுள்ள பெரும்பாலான நகரங்களில் வெயில் அளவு அதிகமாக இருக்கும்.
குறிப்பாக, மே மாதம் 3 வாரங்கள் நீடிக்கும் கத்திரி வெயிலின்போது பல நகரங்களில் வெயில் நூறு டிகிரியைக் கடந்து கொளுத்தும். ஆனால், வேலூர் மாவட்டத்தில் அப்போது வெயில் 110 டிகிரியைவிட அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு மே மாதம் நிலவிய கத்திரி வெயிலின்போது, வேலூரில் வெயில் அளவு அதிகபட்சமாக 111 டிகிரி பதிவானது.
இந்த ஆண்டு வேலூரில் பிப்ரவரி மாதமே வெயில் கொளுத்தத் தொடங்கியது. கடந்த சில நாள்களாக 97 டிகிரி வரை இருந்த வெயில் அளவு செவ்வாய்க்கிழமை முதன்முறையாக 100 டிகிரியை கடந்துள்ளது.
அதன்படி, வேலூரில் செவ்வாய்க்கிழமை வெயில் அளவு 102.60 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. தொடர்ந்து வெயிலின் அளவு அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு மே மாதம் வெயிலின் அளவு 112 டிகிரியைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுகள் கூறுகின்றன. அதிகரித்து வரும் வெயில் காரணமாக வேலூரில் பகல் நேரங்களில் இளநீர், மோர், தர்பூசணி, குளிர்பானங்கள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.
அரக்கோணத்தில்...அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள வானிலைப் பதிவு மையத்தில் செவ்வாய்க்கிழமை அதிக அளவாக 100.76 பாரன்ஹீட் பதிவானது.