கிடப்பில் போடப்பட்ட தொரப்பாடி ரயில்வே மேம்பாலப் பணி மீண்டும் தொடக்கம்
By DIN | Published On : 22nd March 2019 07:16 AM | Last Updated : 22nd March 2019 07:16 AM | அ+அ அ- |

தொரப்பாடி - அரியூர் இடையே பாதி கட்டப்பட்ட நிலையில் கிடப்பில் போடப்பட்டிருந்த ரயில்வே மேம்பாலத்தை இணைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, ரயில்வே மேம்பாலம் போக்குவரத்துக்குத் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாநகராட்சிக்கு உள்பட்ட கஸ்பா பகுதியில் ரூ.17.50 கோடியிலும், அரியூர் தங்கக் கோயில் செல்லும் சாலையின் குறுக்கே தொரப்பாடியில் ரூ. 22.93 கோடி மதிப்பிலும் ரயில்வே மேம்பாலங்களைக் கட்டும் பணி கடந்த 2016 பிப்ரவரி, ஜூலை மாதங்களில் தொடங்கியது.
2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்த இரு ரயில்வே மேம்பாலங்களும் கட்டி முடிக்கப்படவில்லை. மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் பணிகள் முடிக்கப்பட்ட போதிலும், ரயில்வே துறை சார்பில் பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டதால் பேருந்துகள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் பல கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.
தாமதமாகி வரும் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தக் கோரி பொதுமக்கள் தரப்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, கஸ்பா, தொரப்பாடி ரயில் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தொரப்பாடி ரயில்வே கேட் பகுதியில் திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து, கடந்த மாதம் இந்தப் பாலத்தைப் பார்வையிட்ட தமிழக வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, இரு பாலங்களின் பணிகளை விரைவில் முடித்து போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தொரப்பாடி ரயில்வே மேம்பாலத்தின் இரு
புறங்களையும் இணைக்கும் இரும்புப் பாலம் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இதற்காக இரும்புப் பாலங்கள் கொண்டுவரப் பட்டு அவற்றைப் பொருத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு தொரப்பாடி ரயில்வே மேம்பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், கஸ்பா பகுதியிலும் ரயில்வே மேம்பாலத்தை இணைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அவர்கள் கூறினர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...