சுயநலத்துக்காக அணி மாறியவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்: அமைச்சர் கே.சி. வீரமணி
By DIN | Published On : 22nd March 2019 07:19 AM | Last Updated : 22nd March 2019 07:19 AM | அ+அ அ- |

கடந்த பேரவைத் தேர்தலில் வெற்றிபெற வைத்த மக்களுக்கும், கட்சிக்கும் துரோகம் செய்து விட்டு சுயநலத்துக்காக அணி மாறியவர்களுக்கு இந்தத் தேர்தலில் பாடம் புகட்டுங்கள் என மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.
குடியாத்தத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில், வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், குடியாத்தம் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.மூர்த்தி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து அவர் பேசியதாவது:
2016 பேரவைத் தேர்தலில் குடியாத்தம், ஆம்பூர், சோளிங்கரில் நான் பரிந்துரை செய்தவர்களுக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா போட்டியிட வாய்ப்பளித்து வெற்றியும் பெற வைத்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவர்கள் கட்சிக்கும், வாக்களித்த தங்களின் தொகுதி மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டு தங்களின் சுயநலத்துக்காக டி.டி.வி. தினகரன் அணியில் சேர்ந்து, எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசைக் கவிழ்க்க சதி செய்தார்கள். அதன் விளைவு, அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். இதையடுத்து மாவட்டத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
தற்போது மீண்டும் அவர்கள் மக்களாகிய உங்களைத் தேடி வாக்கு கேட்டு வருகின்றனர். அவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். குடியாத்தம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மூர்த்தியை வெற்றிபெற வைத்தால், கெங்கையம்மன் கோயில் அருகே கௌன்டன்யா ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாகத் தரம் உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட குடியாத்தம் புறவழிச் சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டு, விரைவில் அத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.
தொடர்ந்து குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் ஆர். மூர்த்தி பேசினார்.
கூட்டத்தில் அதிமுக நகரச் செயலர் ஜே.கே.என்.பழனி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் வி.ராமு, பாமக நிர்வாகிகள் என்.டி.சண்முகம், ஜி.கே.ரவி, பாஜக மாவட்டத் தலைவர் கொ.வெங்கடேசன், நகரத் தலைவர் பி. ஸ்ரீகாந்த், தமாகா நகரத் தலைவர் எஸ்.அருணோதயம், தேமுதிக மாவட்டச் செயலர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...