தேர்தல் பணியில் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினரையும் அனுசரித்துச் செல்லுங்கள் என அதிமுகவினருக்கு கட்சியின் வேலூர் மேற்கு மாவட்டச் செயலரும், மாநில வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சருமான கே.சி. வீரமணி அறிவுரை வழங்கினார்.
குடியாத்தம் புதுப்பேட்டையில் கட்சியின் தேர்தல் அலுவலகத்தை புதன்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது:
கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நமது இலக்கு வெற்றி ஒன்றே. தேர்தல் நாள் நெருங்குவதால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்றி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும். கூட்டணிக் கட்சியினரை யாரும் உதாசீனப்படுத்தக் கூடாது. அனைவரும் கலந்தாலோசித்து வியூகம் அமைத்து தேர்தல் பணியாற்றுங்கள்.
தேர்தல் பணியில் உள்ள பிரச்னைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும். ஜெயலலிதா இல்லாத தேர்தலை நாம் முதல்முறையாக சந்திக்கிறோம். எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சிகளுக்கு யாரும் பலியாக வேண்டாம். நமது ஒரே இலக்கு வேலூர் தொகுதி மக்களவை வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தையும், குடியாத்தம் பேரவைத் தொகுதி வேட்பாளர் ஆர். மூர்த்தியையும் வெற்றிபெற வைப்பது தான் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், அமமுகவின் குடியாத்தம் நகர அவைத் தலைவர் எம்.பாலாஜி, கள்ளூர் காந்தி நகர் அமமுக கிளைத் தலைவர் சங்கர் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் வீரமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை வீரமணி சால்வை அணிவித்து வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ராஜன், அதிமுக நகரச் செயலர் ஜே.கே.என். பழனி, ஒன்றியச் செயலர் வி.ராமு, தமாகா மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், நகரத் தலைவர் எஸ்.அருணோதயம், வழக்குரைஞர் கே.எம்.பூபதி, பாமக மாவட்டச் செயலர் ஜி.கே.ரவி, பாஜக நகரத் தலைவர் பி. ஸ்ரீகாந்த், தேமுதிக நகரத் தலைவர் ரமணி உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
வாலாஜாபேட்டையில்...
வாலாஜாபேட்டையில் அதிமுக கூட்டணி சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.கே.மூர்த்திக்கு வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினார். அரக்கோணம் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் அமைச்சர் அ.முகமதுஜான், முன்னாள் மாவட்டச் செயலர் சி.ஏழுமலை, சோளிங்கர் இடைத் தேர்தல் பொறுப்பாளர் கமலக்கண்ணன், பாமக மாநில துணைப் பொதுச் செயலர் சரவணன், வாலாஜாபேட்டை நகர அதிமுக செயலர் டபிள்யு.ஜி.மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.