ஜவுளிக் கடை வியாபாரிகள் சங்க வெள்ளி விழா
By DIN | Published On : 28th March 2019 06:06 AM | Last Updated : 28th March 2019 06:06 AM | அ+அ அ- |

குடியாத்தம் ஜவுளி, ரெடிமேட் கடை வியாபாரிகள் சங்கத்தின் வெள்ளி விழா மற்றும் சங்க பொதுக் குழுக் கூட்டம் பாபு மஹாலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவர் முல்லை. சுந்தரேசன் தலைமை வகித்தார். செயலர் சசி.ராஜேந்திரன் வரவேற்றார். பொருளாளர் எஸ்.டி. மைவண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். வேலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஆம்பூர் சி.கிருஷ்ணன், மாவட்டச் செயலர் இரா.ப. ஞானவேலு, பொருளாளர் என். ரவி, மாநில துணைத் தலைவர் என்.இ.கிருஷ்ணன், சட்ட ஆலோசகர் எஸ்.சம்பத்குமார் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
அனைத்துவிதமான ஜவுளி பொருள்களுக்கும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவது, தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்லும் வணிகர்கள் பாதிப்புக்கு உள்ளாவதால், ரூ. 2 லட்சம் வரை வணிகர்கள் பணம் எடுத்துச் செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்க வேண்டும். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், வணிகர் விரோத சட்டங்களை ரத்து செய்யும் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க நிர்வாகிகள் எம்.ஜி. வேலு, என்.சண்முகம், சி.வெங்கடேசன், எஸ்.டி.மோகன்ராஜ், வி.என்.கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...