அனுமதியின்றி மொபெட்டில் சென்று பிரசாரம்: அமமுக பிரமுகர் மீது வழக்கு
By DIN | Published On : 30th March 2019 01:21 AM | Last Updated : 30th March 2019 01:21 AM | அ+அ அ- |

வாணியம்பாடியில் அனுமதியின்றி மொபெட்டில் சென்று தேர்தல் பிரசாரம் செய்ததாக அமமுக பிரமுகர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டப் பேரவைத் தொகுதி பறக்கும் படை அலுவலர் ஜீவானந்தன் தலைமையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் அனுமந்தன், போலீஸார் வெங்கடேசன், இளமதி ஆகியோர் அடங்கிய குழுவினர் வெள்ளிக்கிழமை வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மொபெட்டில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த அமமுக பிரமுகரை நிறுத்தி அவர்கள் விசாரித்தனர்.
அவர் நாமக்கல் மாவட்டம், மாகுட்டைப்பாளையத்தை அடுத்த குண்டம்பட்டிகாடு பகுதியைச் சேர்ந்த வடிவேல் (47) என்றும், அனுமதியின்றி வாகனத்தில் சிறப்பு அமைப்பை ஏற்படுத்தி அமமுகவை ஆதரித்து பிரசாரம் செய்து வந்ததும் தெரிய வந்ததது.
இதுதொடர்பாக வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் பறக்கும் படை அலுவலர் ஜீவானந்தன் புகார் அளித்தார். அதன்பேரில் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட வடிவேலின் மொபெட் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...