கிருஷ்ணரை இழிவாகப் பேசிய கி.வீரமணி மீது காவல் நிலையத்தில் இந்து முன்னணி புகார்
By DIN | Published On : 30th March 2019 11:53 PM | Last Updated : 30th March 2019 11:53 PM | அ+அ அ- |

பகவான் கிருஷ்ணரை இழிவாகப் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வாலாஜாப்பேட்டை காவல் நிலையத்தில் இந்து முன்னணியினர் சனிக்கிழமை புகார் அளித்தனர்.
கி.வீரமணி சில நாள்களுக்கு முன் பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களுடன் கிருஷ்ண பகவானை ஒப்பிட்டுப் பேசினார். இது ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர் பேசிய காணொலியை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கிருஷ்ண பகவானை இழிவுபடுத்தியும், ஹிந்துக்களின் மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தியும் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்யக்கோரி வேலூர் கிழக்கு மாவட்டம், வாலாஜாபேட்டை இந்து முன்னணி அமைப்பினர், வாலாஜாப்பேட்டை காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளித்தனர். அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளர் எஸ்.கே.மோகன் தலைமையில் இந்து முன்னணி ஒன்றியத் தலைவர் எஸ்.கஜேந்திரன், துணைத் தலைவர் மகேந்திரன், கிளை பொருளாளர் குமார், செயற்குழு உறுப்பினர் சந்தோஷ், கே .கே.ரமேஷ் , ராமாபுரம் கிளைச் செயலாளர் மூர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் கோகுல், ராமாபுரம் தலைவர் சதீஷ் உள்ளிட்டோர் இப்புகாரை அளித்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...