பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்க கூடுதலாக 78 பறக்கும் படைகள்
By DIN | Published On : 30th March 2019 01:19 AM | Last Updated : 30th March 2019 01:19 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதைத் தடுக்க வேலூர் மாவட்டத்தில் கூடுதலாக 78 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம் மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலும், ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுக்க பேரவைத் தொகுதிக்கு தலா 3 குழுக்கள் வீதம் மாவட்டம் முழுவதும் ஏற்கெனவே 39 பறக்கும் படைகளும், 39 நிலை கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு, பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தவிர, அரசியல் கட்சியினர் பிரசாரம், பேரணிகளைக் கண்காணிக்க 26 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரசாரக் காட்சிப் பதிவுகளை தணிக்கை செய்து செலவினப் பார்வையாளர்களிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் 13 விடியோ கண்காணிப்புக் குழுக்கள், வேட்பாளர்களின் செலவினங்களைக் கண்காணிக்க 13 உதவி செலவினப் பார்வையாளர் குழு, 13 உதவி தணிக்கைக் குழுக்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே உள்ளதால் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளைத் தீவிரமாக அமல்படுத்தவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதைத் தடுக்கவும் கூடுதலாக 78 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் ஒரே இடத்தில் சோதனை செய்யாமல் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் சோதனை செய்வதை உறுதிசெய்ய அனைத்து பறக்கும்படை குழுக்களுக்கும் ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தவிர, ஒதுக்கப்பட்ட தொகுதிக்கு வெளியே அந்த வாகனங்கள் சென்றால் உடனடியாக மாவட்டத் தேர்தல் பிரிவு அலுவலகத்துக்கு குறுந்தகவல் கிடைக்கும்படியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இனி வரும் நாட்களில் மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு மேலும் தீவிரமடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...