லஞ்சம் பெற்ற போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் ஆயுதப் படைக்கு மாற்றம்
By DIN | Published On : 30th March 2019 06:12 AM | Last Updated : 30th March 2019 06:12 AM | அ+அ அ- |

திருப்பத்தூரில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்ற போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் வியாழக்கிழமை, ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
திருப்பத்தூரில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ஜான் கமலேஷ் . இவர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறுவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது.
இந்நிலையில், திருப்பத்தூர்-சேலம் பிரதான சாலையில் போக்குவரத்து ஆய்வாளர் ஜான் கமலேஷ் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த தனியார் இருசக்கர வாகன விற்பனையகத்தைச் சேர்ந்த பணியாளர்களிடம் ஆய்வாளர் ஜான் கமலேஷ் லஞ்சம் பெறும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட எஸ்.பி. பிரவேஷ்குமார், லஞ்சம் பெற்ற போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் ஜான்கமலேஷை ஆயுதப்படைக்கு மாற்றி வியாழக்கிழமை உத்தரவிட்டார். ஜான் கமலேஷ் மீது ஏற்கெனவே பல்வேறு புகார்கள் இருந்ததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடந்த ஆண்டு வேலூர் மாவட்டத்துக்கு பணியிடம் மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...