ஆம்பூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர் ஆட்டோ சின்னத்தை தனக்கு ஒதுக்குமாறு தேர்தல் அலுவலரிடம் வெள்ளிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆம்பூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
மத்திய பார்வையாளர் எஃப்பட் ஆரா முன்னிலையில், தேர்தல் அலுவலர் சி.பேபி இந்திரா, இறுதி வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.
அப்போது, சுயேச்சை வேட்பாளர் ஷோபா பாரத் தனக்கு அலமாரி, ஆப்பிள், ஆட்டோ ஆகிய 3 சின்னங்களில் ஒன்றை கேட்டிருந்தார். எனினும், ஆப்பிள் சின்னத்தை யாருக்கும் ஒதுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருப்பதாகவும் வேட்பாளரின் முதல் முன்னுரிமைப்படி அலமாரி சின்னம் ஒதுக்கப்படுவதாகவும் கூறினார்.
இதை ஏற்க மறுத்த ஷோபா பாரத், தனக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தார். அதற்கு, முதல் முன்னுரிமைப்படியே சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். 3-ஆவது முன்னுரிமை சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் அலுவலர் பதிலளித்தார்.
இதனால் ஷோபா பாரத் மற்றும் அவருடன் வந்தவர்கள், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் முதல் விருப்ப சின்னத்தை மட்டுமே வழங்க முடியும் என கூறியதாகத் தெரிகிறது.
இதை அறிந்து ஆவேசமடைந்த ஷோபா பாரத்தின் ஆதரவாளர்கள் ஆட்டோ சின்னத்தை ஒதுக்கா விட்டால் இங்கிருந்து செல்ல மாட்டோம் எனக் கூறி, வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையில் போலீஸார் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர் அலமாரி சின்னத்தை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.