நவ்லாக், கூடப்பட்டு அரசுத் தோட்டக்கலைப் பண்ணைகளில் கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
தோட்டக்கலைத் துறை சார்பில் பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக ராணிப்பேட்டை அருகே உள்ள நவ்லாக் அரசு தோட்டக்கலைப் பண்ணை, திருப்பத்தூர் அருகே உள்ள கூடப்பட்டு அரசுத் தோட்டக்கலைப் பண்ணை ஆகியவற்றில் கோடைக்கால பயிற்சி முகாம் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. தலா 3 நாள்கள் வீதம் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில் தோட்டக்கலை பயிர்கள் வளர்ப்பு, வீட்டில் அலங்காரச் செடிகள், காளான் வளர்த்தல், வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்தல், வீட்டு மாடியில் தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தப் பயிற்சி வரும் 31-ஆம் தேதி வரை அரசு விடுமுறை நாள்கள் தவிர மற்ற நாள்களில் நடைபெறும். பயிற்சிப் பெறுவோரைத் தேர்ந்தெடுத்து பயிற்சிக் கட்டணமாக நாளொன்றுக்கு ரூ. 100 வீதம் 3 நாள்களுக்கு ரூ. 300 செலுத்தி பங்கேற்கலாம்.
பயிற்சியின்போது கையேடு, குறிப்பேடு, எழுதுபொருள்கள் வழங்கப்படும்.
பயிற்சி பெறுபவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு அரசு தோட்டக்கலைப் பண்ணை - 0416 - 2266530 (நவ்லாக்), 0416 - 2243530 (கூடப்பட்டு) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.