தமிழகத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களிடம் தீவிரவாதிகளைவிட அதிக அளவில் கடும் சோதனை நடத்தியது கண்டனத்துக்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொதுச் செயலர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டினார்.
வேலூர் சாய்நாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா மாவட்டச் செயலர் சாமிக்கண்ணு தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் இரா.முத்தரசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மக்களவைத் தேர்தலிலும், 22 பேரவை இடைத்தேர்தலிலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிதான் வெற்றி பெறும். அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி பயத்தால்தான் பேரவைத் தலைவர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி 3 பேரவை உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் மறு வாக்குப்பதிவை 10 இடங்களில் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வேலூர் மக்களவைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும். வேலூரில் மட்டும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது எனக் கூறுவது நகைப்புக்குரியது.
தமிழகத்தில் 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்தும் இதுவரை எந்த வறட்சி நிவாரணப் பணிகளையும் அரசு மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தேர்வில் பல குளறுபடிகள் நடந்துள்ளன. தேர்வெழுத வந்த மாணவர்களிடம் தீவிரவாதிகளைவிட அதிக அளவில் கடும் சோதனை நடத்தியுள்ளனர்.
குறிப்பாக, இறை நம்பிக்கை கயிறு அணிதலை அகற்றியதுடன் கம்மல் மூக்குத்தி அணியக் கூடாது என்றும், எழுதுபொருள்கள் கூட கொண்டு செல்லக்கூடாது என்று கூறியுள்ளனர். அவர்கள் கொடுத்த எழுதுபொருள்கள் சரிவர எழுதவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு ஏற்படும் பின்னடைவுக்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சியடையவில்லை என்று காரணம் கூறி 1,500 ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது என்றார் அவர்.
ஆசிரியர் சங்க நிர்வாகி மணி, விவசாயிகள் சங்கத் தலைவர் முல்லை, ஏஐடியுசி மாநில செயலர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.