ரூ. 5.5 லட்சம் வழிப்பறி வழக்கில் இரு காவலர்கள் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 05th May 2019 11:50 PM | Last Updated : 05th May 2019 11:50 PM | அ+அ அ- |

ஜோலார்பேட்டை அருகே ரூ. 5.5 லட்சம் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜோலார்பேட்டையை அடுத்த கோனேரிக்குப்பத்தைச் சேர்ந்த அசோகன் (38), கடந்த சில நாள்களுக்கு முன் ரூ. 5.5 லட்சம் பணத்துடன் தனது நண்பர் கோவிந்தராஜுடன் கட்டேரி அம்மன் கோயில் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அசோகனை வழிமறித்து அவரிடம் இருந்த ரு. 5.5 லட்சத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தனர்.
இதுதொடர்பாக அருண் என்பவரைப் பிடித்து விசாரித்ததில் அவர், அசோகனிடம் பணம் பறித்துச் சென்றது தெரியவந்தது. போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த வழிப்பறியில் குற்றப்பிரிவு காவலர்கள் விஜயரங்கன், தமிழ்மணி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விசாரணைக்குப் பின் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் சனிக்கிழமை உத்தரவிட்டார்.