நீட் தேர்வு: மாவட்டத்தில் 8,895 பேர் எழுதினர்
By DIN | Published On : 05th May 2019 11:52 PM | Last Updated : 05th May 2019 11:52 PM | அ+அ அ- |

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வை வேலூர் மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த 9,944 பேரில் 8,895 பேர் எழுதினர். 1,049 பேர் தேர்வு எழுதவில்லை.
நாடு முழுவதும் நீட் எனும் மருத்துவ நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வையொட்டி வேலூர் மாவட்டத்தில், காட்பாடி விஐடி பல்கலைக்கழகம், கிறிஸ்டியான் பேட்டை கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 12 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்தத் தேர்வு மையங்களில் வேலூர், திருவண்ணாமலை உள்பட அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்திருந்த 9,944 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்தத் தேர்வை மாவட்டத்திலுள்ள 12 மையங்களிலும் சேர்த்து மொத்தம் 8,895 பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 1,049 பேர் தேர்வு எழுதவில்லை. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் நீட் தேர்வை 89.5 சதவீதம் பேர் எழுதினர்.
காலை 10.30 மணிக்கே மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். அவர்கள் தேர்வு மைய நுழைவு வாயிலில் பெற்றோர்களுடன் காத்திருந்தனர். காலை 11.30 மணியளவில் தேர்வு மையங்கள் திறக்கப்பட்டன. தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக வரிசைகள் அமைக்கப்பட்டு 12.30 மணி முதல் ஒவ்வொருவரும் கடும் சோதனைக்குப் பிறகு தேர்வு மைய வளாகத்துக்குள் அனுப்பப்பட்டனர். பின்னர், அவர்கள் மதியம் 1.30 மணிக்கு தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
வேலூர் சாய்நாதபுரம் விவிஎன்கேஎம் பள்ளியில் மாணவிகளை தலைமுடியை அவிழ்த்து முதலில் சோதனை செய்யப்பட்டது. பின்னர், தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் அறிவுறுத்தலின்பேரில் அத்தகைய சோதனைகள் நிறுத்தப்பட்டன. அத்துடன், மாணவிகள் பர்தா, துப்பட்டாவுடனும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
நீட் தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் சிரமமின்றி செல்ல ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் 40 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் நலன்கருதி அனைத்துத் தேர்வு மையங்களுக்கும் 108 ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. மேலும், மாணவர்களுடன் வந்திருந்த பெற்றோர்கள் காத்திருக்க தேர்வு மையத்துக்கு வெளியே தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மையத்துக்கும் தலா ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் கூறியது:
நீட் தேர்வுக்காக வேலூர் மாவட்டத்தில் 12 மையங்களிலும் 9,944 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். அதில், 1,049 பேர் தேர்வு எழுதவில்லை. இதற்கு இவ்வாண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதால் அதில் தேர்ச்சி பெறாத, குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்பது காரணமாக இருக்கலாம் என்றார் அவர்.