சிறிய ரக விமானம் விழுந்ததாக வதந்தி: போலீஸார் தேடுதல் வேட்டை
By DIN | Published On : 15th May 2019 07:07 AM | Last Updated : 15th May 2019 07:07 AM | அ+அ அ- |

வேலூரில் சிறிய ரக விமானம் விழுந்ததாக வதந்தி பரவியதை அடுத்து போலீஸார் விடிய விடிய அதைத் தேடினர்.
வேலூர் மாநகரில் சிறிய ரக விமானம் திங்கள்கிழமை மாலை குறைந்த உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இரவு 10 மணியளவில் மீண்டும் குறைந்த உயரத்தில் பறந்தது. திடீரென அந்த விமானம் வேலூர் ஓல்டு டவுன் பகுதியில் விழுந்ததாக தகவல் பரவியது. இதையடுத்து தரையில் விழுந்த விமானத்தைப் பார்க்க ஏராளமான மக்கள் அப்பகுதியில் குவிந்தனர்.
தகவலறிந்த போலீஸாரும் அப்பகுதிக்கு விரைந்து சென்று சிறியரக விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மலைப்பகுதியில் விழுந்திருக்கலாம் எனக் கருதி செங்கானத்தம், சைதாப்பேட்டை மலைகளிலும் விடிய விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், அந்த விமானம் எங்கும் விழவில்லை என்பதும், சிலர் வதந்தி பரப்பியிருப்பதும் தெரியவந்தது.
எனினும், குறைவான உயரத்தில் விமானம் பறந்தது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.