பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவியை செயலிழக்கச் செய்வது குற்றம்: சார்-ஆட்சியர்
By DIN | Published On : 15th May 2019 07:07 AM | Last Updated : 15th May 2019 07:07 AM | அ+அ அ- |

பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை செயலிழக்கச் செய்வது குற்றச் செயல் என்று சார்-ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்தார்.
அரக்கோணம் வட்டத்துக்கு உள்பட்ட பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர ஆய்வு அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வாகனங்களை ஆய்வு செய்த பின் சார்-ஆட்சியர் இளம்பகவத் பேசியது: பள்ளி வாகனங்களை இயக்குவோர் அதற்கான தகுதிகளுடன் இருப்பது மிகவும் அவசியம். தகுதியில்லாதவர்கள் தற்காலிகமாகக்கூட பள்ளி வாகனங்களை இயக்கக் கூடாது. அவ்வாறு இயக்கினால் அது குற்றமாகக் கருதப்படும்.
பள்ளி வாகனங்களில் குழந்தைகள் தாங்களாக ஏறி, இறங்க வசதிகள் செய்து தர வேண்டும். வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அவற்றைச் செயலழிக்கச் செய்வது குற்றம் என்பதை ஓட்டுநர்கள் தெரிந்திருக்க வேண்டும் என்றார்.
ஆய்வில் ராணிபேட்டை மண்டலப் போக்குவரத்து அலுவலர் பாட்டப்பசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவராஜ் (அரக்கோணம்), சரவணன் (ராணிப்பேட்டை), அரக்கோணம் வட்டாட்சியர் ஜெயக்குமார், நகரக் காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம், பரமேஸ்வரமங்கலம் அரசினர் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆய்வையொட்டி, அரக்கோணம் தீயணைப்பு அலுவலர் பழனி தலைமையில் தீயணைப்பு வீரர்கள், பள்ளி வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால், அதை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். இதில், 125 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் முதலுதவிப் பெட்டி, தாழ்வு படிகள், அவசரக்கால கதவுகள் உள்ளிட்டவற்றில் குறைபாடுகள் இருந்த 25 வாகனங்கள் மறு ஆய்வுக்கு வர உத்தரவிடப்பட்டது.