ரூ. 1,500 லஞ்சம் பெற்ற செவிலியருக்கு 3 ஆண்டு சிறை
By DIN | Published On : 15th May 2019 07:10 AM | Last Updated : 15th May 2019 07:10 AM | அ+அ அ- |

டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் உதவித் தொகை பெற கர்ப்பிணியிடம் ரூ. 1,500 லஞ்சம் பெற்ற செவிலியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் முதன்மை குற்றவியல் நடுவர் மன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
திருப்பத்தூர் அருகே மாடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் தொழிலாளி. இவரது மனைவி சத்யா. கர்ப்பிணியாக இருந்த இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக மாடப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றார்.
அப்போது, டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் ரூ. 12 ஆயிரம் உதவித் தொகை பெற ரூ. 1,500 லஞ்சம் தர வேண்டும் என்று முனியப்பனிடம் சுகாதார நிலையத்தில் பணியாற்றிய செவிலியர் பத்மாவதி (54) கேட்டுள்ளார்.
இதுகுறித்து, முனியப்பன் ஊழல் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் கொடுத்த ரசாயனப் பொடி தடவிய
ரூ. 1,500-ஐ முனியப்பன் 2014 டிசம்பர் 24-ஆம் தேதி செவிலியர் பத்மாவதியிடம் அளித்தார்.
அப்போது, வெளியில் மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார், உள்ளே சென்று பணத்துடன் செவிலியர் பத்மாவதியைக் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் முதன்மை குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.பாரி, செவிலியர் பத்மாவதிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.