சுதந்திரத்துக்குப் பிறகு முதன்முறையாக மலைக் கிராமங்களுக்கு ரூ. 8.79 கோடியில் சாலை வசதி
By DIN | Published On : 19th May 2019 03:31 AM | Last Updated : 19th May 2019 03:31 AM | அ+அ அ- |

சுதந்திரத்துக்குப் பின் முதன்முறையாக வேலூர் மாவட்டத்திலுள்ள மலைக் கிராமங்களுக்கு ரூ. 8.79 கோடியில் சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியுள்ளது.
வேலூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தில் புதூர் நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய ஊராட்சிகள் மலைப் பகுதிகளில் அமைந்துள்ளன. இதில், புதூர்நாடு ஊராட்சியில் உள்ள புதூர் நாடு, மொழலை, சித்தூர், அருமல்பட்டு, வழுதலம்பட்டு, நடுகுப்பம், விளாங்குப்பம், கோம்பை, மேலூர், கீழூர் ஆகிய கிராமங்களிலும், நெல்லிவாசல் நாடு ஊராட்சியிலுள்ள நெல்லிவாசல் நாடு, நெல்லிப்பட்டு, சேம்பறை, மேல்பட்டு, புலியூர், வலசை, மலைதிருப்பத்தூர், மலையாண்டிப்பட்டி ஆகிய கிராமங்களிலும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இவ்விரு ஊராட்சிகளில் 6 தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளும், 2 ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்படும் இந்த மலைக் கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருள்களை அப்பகுதி மக்கள் திருப்பத்தூர், செங்கம், சிங்காரப்பேட்டை சந்தைகளுக்குக் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். இதுதவிர, உயர்கல்வி, மருத்துவ உயர் சிகிச்சை உள்ளிட்ட முக்கியத் தேவைகளுக்காகவும் அவர்கள் இந்த பகுதிகளுக்கே வரவேண்டியுள்ளது.
எனினும், இந்த மலைக் கிராமங்களுக்கு சுதந்திரத்துக்குப் பிறகு இதுவரை சாலை வசதி செய்யப்படவில்லை. இதனால், நகர்ப்புற பகுதிகளுக்கு வந்து செல்லவும், விளை பொருள்களை சந்தைக்குக் கொண்டு செல்வதிலும் இந்த மலைக் கிராம மக்கள் பெருமளவில் சிரமம் அடைந்து வந்தனர். குறிப்பாக, பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் கரடுமுரடான பாதையிலேயே நடந்து வந்து கல்வி பயில வேண்டிய அவல நிலை இருந்தது.
இதையடுத்து, புதூர் நாடு, நெல்லிவாசல் நாடு ஊராட்சிகளுக்கு உள்பட்ட மலைக் கிராமங்களுக்கு சாலை வசதி செய்துதரக்கோரி, பல ஆண்டுகளாக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். அத்துடன், சாலை வசதி செய்துதராவிடில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று ரூ. 8 கோடியே 79 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் வனத்துறை மூலம் அந்த மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து வருகிறது.
இதன்படி, புதூர்நாடு முதல் நெல்லிவாசல் நாடுவரை 13.90 கிலோ மீட்டருக்கு ரூ. 4.73 கோடி மதிப்பிலும், நெல்லிவாசல்நாடு முதல் சிங்காரப்பேட்டை வரை 11.50 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.4.06 கோடி மதிப்பிலும் என மொத்தம் 25.40 கிலோ மீட்டருக்கு இந்த சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன், முதல்கட்ட மாக தற்போது புதூர்நாடு முதல் நெல்லிவாசல்நாடு வரை 13.90 கி.மீ தூரத்துக்கு சாலை அமைக்கும் பணி முடிவடைந்து, தற்போது போக்குவரத்து தொடங்கியுள்ளது. தொடர்ந்து, நெல்லிவாசல்நாடு முதல் சிங்காரப்பேட்டை வரை சாலை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், சாலையைத் தரமாகவும், விரைவாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நீண்டபோராட்டத்துக்குப் பிறகு மலைக் கிராமங்களுக்கு சாலை வசதி செய்யப்படுவதற்கு அந்த மலை கிராம மக்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.