மணல் கடத்திய டிராக்டர் மோதி தந்தை, மகன் பலி
By DIN | Published On : 19th May 2019 03:32 AM | Last Updated : 19th May 2019 03:32 AM | அ+அ அ- |

அரக்கோணம் அருகே மணல் ஏற்றிச் சென்ற டிராக்டர் மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனர். இதையடுத்து, டிராக்டர் ஓட்டுநரைக் கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரக்கோணத்தை அடுத்த பள்ளூர் காலனியைச் சேர்ந்தவர் ரஜினி (35), தொழிலாளி. இவரது மனைவி கற்பகம் (29). இவர்களுக்கு இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை ரஜினி தனது மகன்கள் ஆகாஷ் (7), தினேஷ் (5) ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு, பைக்கில் அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றார். அப்போது அவ்வழியே மணல் ஏற்றி வந்த டிராக்டர், ரஜினி சென்ற பைக் மீது மோதியது.
இதில் ரஜினி, தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஆகாஷ் மீட்கப்பட்டு, செங்கல்பட்டு அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து நெமிலி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து அறிந்த அக்கிராம மக்கள், அப்பகுதியில் நடைபெறும் மணல் கடத்தலைத் தடுக்க வேண்டும் எனவும், விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் உரிமையாளர், ஓட்டுநரைக் கைது செய்ய வேண்டும் எனவும் கோரி அரக்கோணம்-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டப் பகுதிக்கு விரைந்த அரக்கோணம் டிஎஸ்பி விஜயகுமார், அரக்கோணம் வட்டாட்சியர் ஜெயக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து, விபத்து நிகழ்ந்த இடத்தை நள்ளிரவில் வேலூர் மாவட்ட எஸ்.பி. பிரவேஷ்குமார் நேரில் பார்வையிட்டு, அப்பகுதியில் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுநர் சதீஷ் (29), டிராக்டரின் உரிமையாளர் ராஜேஷ் (30) ஆகிய இருவரையும் நெமிலி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.