நந்தியாலம் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்து மரங்கள் வளர்த்து மின்சாரத்தைத் திருடி தண்ணீர் பாய்ச்சி வருகின்றார்களா என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க ராணிப்பேட்டைசார் ஆட்சியர் இளம்பகவத் சனிக்கிழமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வாலாஜாப்பேட்டை வட்டம் நந்தியாலம் ஏரியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து மா மரங்களை வளர்த்து வருவதாகவும் அதற்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து மின்சாரம் திருடி நீர் பாய்ச்சி வருவதாகவும் மாங்குப்பம் ஊர் பொதுமக்கள் சார்பாக ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
அப்பகுதியில் அவர் சனிக்கிழமை ஆய்வு செய்தார். ஏரிப் பகுதியில் மாமரங்கள் வளர்த்துள்ளதும், ஆழ்துளைக் கிணறு அமைத்து அருகில் உள்ள விவசாய மின் இணைப்பிலிருந்து மின்சாரம் எடுத்து இயக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக மாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் என்கின்ற கேசவன் மீது நடவடிக்கை எடுக்க ஆற்காடு மின்சார வாரிய செயற்பொறியாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உதவிப்பொறியாளர், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை, அதிகாரிகள் நந்தியாலம் ஏரியின் எல்லைக் கற்களை நிர்ணயம் செய்து, எல்லையைச் சுற்றி அகழி வெட்டும் பணியை 10 நாட்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு ஏரியின் நிலப்பகுதிக்குள் வரும் மரங்களை வகைப்படுத்தி எண்கள் இட்டு அதனை உரிய பதிவேடுகளில் பதிவு செய்து அரசுக்குச் சொந்தமான மரமாக அறிவிக்க வேண்டும்.
நந்தியாலம் ஏரியின் நிலப்பரப்பை அளவு செய்து எல்லைக்கற்கள் நட, நில அளவையர், நிலத்தை அளந்து எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும். இப்பணியினை வாலாஜா வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உரிய கவனம் செலுத்தி ஒரு வார காலத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி மரங்களின் பலன்களை அனுபவிக்க உரிமை கோரி மனு எதுவும் அளிக்கப்பட்டால், பொதுப்பணித்துறையின் கருத்தைப் பெற்று, வருவாய்த் துறையின் உரிய விதிமுறைகளை பின்பற்றி மனுக்களை பரிசீலனை செய்து, முடிவெடுக்க வேண்டும்.
ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர், மேற்கண்ட ஆழ்துளைக் கிணறு பட்டா நிலத்தில் அமைந்துள்ளதா அல்லது பொதுப்பணித்துறை நிலத்தில் அமைந்துள்ளதா என்பதை உறுதிசெய்து, பொதுப்பணித்துறை நிலத்தில் அமைந்திருந்தால் அதனை ஊராட்சியின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, அதன் மோட்டார் மற்றும் மின் சாதனங்களைக் கையகப்படுத்தி ஊராட்சியின் குடிநீர்த் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மணிவண்ணன், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.