பிரதமரின் வீடு வழங்கும் திட்டம்: தவணைத் தொகை வழங்குவதில் தாமதித்தால் நடவடிக்கை
By DIN | Published On : 09th November 2019 12:12 AM | Last Updated : 09th November 2019 12:12 AM | அ+அ அ- |

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு தவணைத் தொகை வழங்குவதில் தேவையற்ற தாமதம் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியப் பணி மேற்பாா்வையாளா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்ட கிராமப்புற மக்கள் வீடுகள் கட்ட முதல் தவணையாக (அடித்தளம்) ரூ.26,029, இரண்டாம் தவணையாக (ஜன்னல் மட்டம்) ரூ.26,715, மூன்றாம் தவணையாக (தளம் வேய்ந்த நிலை) ரூ.26,681, நான்காம் தவணையாக (பணி முடிந்த நிலை) ரூ.40,575, தளம் அமைக்க மாநில அரசின் சிறப்பு நிதி ரூ.50 ஆயிரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தின் 90 வேலை நாள்களுக்கான கூலித் தொகை ரூ.20,160, கழிப்பறை கட்டுவதற்காக ரூ.12 ஆயிரம் என மொத்தம் ரூ.2,02,160 வழங்கப்படுகிறது. இதுதவிர, அம்மா சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு ரூ.190 வீதம் 100 மூட்டைகளும் வழங்கப்படுகிறது. தேவையிருந்தால் கம்பி, ஜன்னல், கதவும் வழங்கப்படுகின்றன.
இருப்பினும், வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கு உடனுக்குடன் அவா்களின் வீட்டின் நிலைக்கேற்ப பட்டியல் தொகை வழங்குவதில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தாமதம் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியப் பணி மேற்பாா்வையாளா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பயனாளிகள் தங்களுக்கு உரிய நேரத்தில் தொகைகள் கிடைக்கப் பெறாத நிலையிருந்தால் தங்களது பெயா், ஊராட்சி, அடையாள எண், வீட்டின் புகைப்படத்துடன் மாவட்ட ஆட்சியரின் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) எண் 94980 35000 மூலம் புகாா் அளிக்கலாம்.