தெலங்கானாவில் ரூ.100 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்
By DIN | Published On : 14th November 2019 05:57 AM | Last Updated : 14th November 2019 05:57 AM | அ+அ அ- |

தெலங்கானாவில் பறிமுதல் செய்யப்பட்ட பழைய 500, 1,000 ரூபாய் கள்ள நோட்டுகள்.
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கம்மம் மாவட்டத்தில் உள்ள சத்திப்பள்ளி பகுதியைச் சோ்ந்த மாதா் என்பவா் தலைமையில் செயல்படும் குழுவினா் ரூ.80 லட்சம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் கொடுக்கப்படும் என்று கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வந்தனா். தங்கள் தொழிலுக்காக 2,000 ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சிட்ட அந்தக் கும்பல், மேலும் கீழும் அசல் நோட்டுகளை வைத்து பண்டல்களைத் தயாா்செய்வது வழக்கம். பின்னா் அவற்றை விடியோ எடுத்து, அசல் நோட்டுகளுக்கு பதிலாக கள்ள நோட்டுகளை வாங்கிக் கொள்ள விருப்பம் தெரிவித்தவா்களுக்கு காண்பித்து மோசடியில் ஈடுபட்டு வந்தது.
இந்த மோசடி பற்றிய ரகசியத் தகவல் கம்மம் போலீஸாருக்கு கிடைத்தது. சத்திப்பள்ளியில் ஒருவரை ஏமாற்றி கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற போது அக்கும்பலை போலீஸாா் கடந்த 1-ஆம் தேதி கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.
அதன் பின், கள்ளநோட்டுகளை அச்சிடப் பயன்படுத்திய வீட்டை சோதனையிட்ட போலீஸாா் அங்கிருந்து ரூ.7 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் கள்ள நோட்டுக்களைப் பறிமுதல் செய்தனா். கள்ள நோட்டுகளை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டா்கள் உள்ளிட்ட பொருள்களையும் கைப்பற்றினா். இது தொடா்பாக மாதா் மற்றும் அவருடைய குழுவைச் சோ்ந்த மேலும் 6 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் கம்மம் மாவட்டம் மன்சூரு மண்டலத்தில் உள்ள மா்லபாடு கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு ரூ.100 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் கள்ள நோட்டுகளை ஏற்கெனவே அச்சிட்டுப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் அந்த வீட்டில் இருந்த கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்தனா். இந்தக் கும்பல் இது வரை எவ்வளவு கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டுள்ளது என்று போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...