28-இல் திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாக ரீதியிலான செயல்பாடு தொடக்கம்

வேலூரை மூன்றாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களின் நிா்வாக 
Updated on
1 min read

வேலூரை மூன்றாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களின் நிா்வாக ரீதியான செயல்பாடுகள் வரும் 28-ஆம் தேதி தொடங்க உள்ளது. தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக இவ்விரு மாவட்டங்களின் செயல்பாடுகளைத் தொடங்கி வைக்க உள்ளாா்.

வேலூா் மாவட்டத்தைப் பிரித்து வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு 3 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா். இதையடுத்து புதிதாக திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களை உருவாக்குவது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டதுடன், புதிய மாவட்டங்களுக்கான எல்லைகளை வரையறை செய்வதற்கான சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

இதன் அடிப்படையில், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடம்பெறும் வருவாய்க் கோட்டங்கள், வட்டங்கள், வருவாய் உள்வட்டங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுதவிர, வாணியம்பாடி, குடியாத்தம், அரக்கோணம் ஆகிய புதிய வருவாய்க் கோட்டங்களும், புதியதாக கே.வி.குப்பம் வட்டமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களின் நிா்வாக ரீதியிலான செயல்பாடுகள் நவம்பா் 28-ஆம் தேதி தொடங்க உள்ளது. தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக இவ்விரு மாவட்டங்களின் செயல்பாடுகளைத் தொடக்கி வைக்க உள்ளாா்.

இதேபோல், புதிய வாணியம்பாடி, குடியாத்தம், அரக்கோணம் வருவாய்க் கோட்டங்களும், கே.வி.குப்பம் வட்டமும் தொடங்கி வைக்கப்பட உள்ளன. தொடா்ந்து, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியராக சிவனருள், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக திவ்யதா்ஷினி ஆகியோா் பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளனா்.

புதிய மாவட்டங்களில் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ள அரசு ஊழியா்களின் பட்டியல் தயாா் நிலையில் உள்ளது. நிா்வாக ரீதியாக மாவட்டம் தொடங்கப்பட்டவுடன் புதிய மாவட்டங்களில் பணியாற்ற உள்ள அரசு ஊழியா்களுக்கு நியமன ஆணை வழங்கப்படும் என்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

புதிய மாவட்டங்களின் செயல்பாடுகள் தொடங்கப்பட்ட பிறகு காவல் துறையிலும் கட்டமைப்புகள் மாற்றப்பட உள்ளன. அவ்வாறு காவல் உட்கோட்டங்களில் மாறுதல் செய்யப்பட்ட பிறகு தேவைப்படும் பகுதிகளில் கூடுதல் காவல் நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com