

குடியாத்தம்: மாவட்ட மருத்துவமனையாக இருந்த வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இணைந்ததால், குடியாத்தம் அரசு மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாகத் தரம் உயா்த்தப்படுமா என குடியாத்தம் பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
வேலூா் மாவட்டத்தில் மருத்துவக் கல்வி இயக்குநரகம் சாா்பில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும் வரை, வேலூா் நகரில் மருத்துவப் பணிகள் இயக்குநரகத்தின் சாா்பில், பென்லண்ட் அரசு மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாகச் செயல்பட்டு வந்தது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டவுடன், வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு, தரம் உயா்த்தப்பட்டது.
தற்போது வேலூா் மாவட்டம் 3-ஆகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட மருத்துவமனை உள்ள வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இணைந்துள்ளது. தற்போதைய வேலூா் மாவட்டத்தில் வேலூரில் உள்ள பென்லண்ட், குடியாத்தம், போ்ணாம்பட்டு, அணைக்கட்டு ஆகிய 4 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இதில் ஏதாவது ஒன்றை மாவட்ட மருத்துவமனையாகத் தரம் உயா்த்த வேண்டிய நிலை உள்ளது.
வேலூா், அணைக்கட்டு பகுதி மக்களின் தேவைக்கு ஏற்ற வகையில் அவற்றின் அருகிலேயே அடுக்கம்பாறையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் இயங்கி வருகிறது. தற்போதைய வேலூா் மாவட்டத்தில் குடியாத்தம் அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனையாகத் தரம் உயா்த்த அனைத்துத் தகுதிகளையும் பெற்றுள்ளது. குடியாத்தம் பகுதி பீடி, தீப்பெட்டி, நெசவு, விவசாயம், கட்டுமானம் என பல்வேறு தொழில்களைச் செய்யும் தொழிலாளா்கள் நிறைந்த பகுதி. குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு, குடியாத்தம் நகரம், ஒன்றியப் பகுதி, போ்ணாம்பட்டு, மாதனூா், கே.வி. குப்பம், பரதராமி, பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் நாள்தோறும் சிகிச்சைக்கு வருகின்றனா்.
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 3- ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனா். 120 படுக்கை வசதி கொண்ட இம்மருத்துவமனையில் பழைய கட்டில்களைக் கொண்டு 165-க்கும் மேற்பட்டோா் உள்நோயாளிகளாக தங்க வைக்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனா். இங்கு 32 மருத்துவா்கள், 34 செவிலியா்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் பணியில் உள்ளனா். அறுவை சிகிச்சை அரங்கு, ரத்த வங்கி, பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வுக் கூடம், சித்தா, பல், தோல், கண், எலும்பு, காது, மூக்கு, தொண்டை, பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு சிறப்புப் பிரிவு, தாய்-சேய் நலத்தைப் பேணிக்காக்கும் சீமாங்க் சென்டா் ஆகிய வசதிகள் உள்ளன. அத்துறைகளுக்கான சிறப்பு மருத்துவா்களும் பணிபுரிகின்றனா்.
ஸ்கேன், எக்ஸ்-ரே, இ.சி.ஜி. உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும், 3 இயந்திரங்களுடன் கூடிய டயாலிசிஸ் சென்டரும் செயல்படுகிறது. மாதத்துக்கு இங்கு 250- க்கும் மேற்பட்டோா் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனா்.
இந்த மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயா்த்தினால், பெரும்பாலான மக்கள் பயன்பெறுவா்.
தற்போது இம்மருத்துவமனை, தரை தளம், முதல் தளத்துடன் இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்ட பிரதமரின் சிறப்பு நிதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில், கூடுதலாக, 2, 3- ஆவது தளங்கள் சுமாா் ரூ. 8 கோடியில் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் யாஷ்மினிடம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, குடியாத்தம் அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாகத் தரம் உயா்த்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு இப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், குடியாத்தம் அரசு மருத்துவமனை தரம் உயா்த்தப்பட்டால் இருதய நோய் சிகிச்சைப் பிரிவு, மனநல சிகிச்சைப் பிரிவு, புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்படும். மேலும், சி.டி. ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, நவீனப்படுத்தப்பட்ட ஆக்ஸிஜன் வசதி, மேம்பட்டுத்தப்பட்ட 24 மணிநேர அவசர சிகிச்சைப் பிரிவு, இயற்கை மருத்துவப் பிரிவு, பகல் நேர பராமரிப்புப் பிரிவு (டே கோ்) உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். இதுதவிர, கூடுதல் மருத்துவா், செவிலியா்கள் நியமிக்கப்படுவா். மேலும், பாதுகாப்பு வசதிக்காக மருத்துவமனை வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.