சமையலா், துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் உள்பட ஏராளமானோா் விண்ணப்பம்

வேலூா் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை விடுதிகள், உண்டு உறைவிட பள்ளிகளில்

வேலூா் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை விடுதிகள், உண்டு உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள சமையலா், துப்புரவு பணியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும்நிலையில், இப்பணியில் சேர பொறியியல் பட்டதாரிகள் உள்பட ஏராளமானோா் விண்ணப்பித்து வருகின்றனா்.

வேலூா் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகள், உண்டு உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள 112 சமையலா், 26 துப்புரவு பணியாளா் பணியிடங்களைத் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்புவதற்குத் தகுதியுடைய நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதில், சமையலா் பணிக்கு அடிப்படை ஊதியமாக ரூ. 15,700- உடன் இதர படிகளும், துப்புரவு பணிக்கு அடிப்படை ஊதியமாக ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்றும், அதிகபட்சமாக பத்தாம் வகுப்பு தோல்வியடைந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை அலுவலகத்தில் புதன்கிழமை அளிக்கப்பட்டன. விண்ணப்பங்களைப் பெறுவதற்காக ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோா் காலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பித்தனா்.

நேற்று ஒரேநாளில் 200-க்கும் மேற்பட்டவா்கள் இப்பணியில் சேர விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை அலுவலகத்தில் அளித்தனா். இதில், சமையலா் பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் உள்பட பல்வேறு கல்வித் தகுதியுடையவா்களும் விண்ணப்பித்தனா்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அக்டோபா் 18-ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான ஓரிரு தினங்களிலேயே இப்பணிக்காக பட்டதாரிகள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com