அடிப்படை வசதியின்றி: இருளில் தவிக்கும் இருளர் இன மக்கள்
By DIN | Published On : 02nd September 2019 12:01 AM | Last Updated : 02nd September 2019 12:31 PM | அ+அ அ- |

இப்பகுதியில் உள்ள இருளர் இன மக்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஆனால், மின்சாரம், தெருவிளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. மேலும், ரேஷன் பொருள்களை வாங்குவதற்கு ஒன்றரை கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும். இங்குள்ள குழந்தைகள் சென்றாயன்பாளையத்தில் உள்ள அங்கன்வாடிக்கும், பள்ளிக்கும் சென்று வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே கடந்த 20 ஆண்டுகளாக குடிநீர், மின்சாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் இருளர் இன மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பூண்டி ஊராட்சி ஒன்றியம் சென்றாயன்பாளையம் ஊராட்சியில் இருளர் காலனி உள்ளது. இங்கு சாலையோரப் பகுதியில் இருளர் இன மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் மரம் வெட்டுதல், மாந்தோப்புக்கு காவல் உள்ளிட்ட வேலைகளுக்குச் சென்று, அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர். பொருளாதார வசதியில்லாத நிலையில் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள இருளர் இன மக்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஆனால், மின்சாரம், தெருவிளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.
மேலும், ரேஷன் பொருள்களை வாங்குவதற்கு ஒன்றரை கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும். இங்குள்ள குழந்தைகள் சென்றாயன்பாளையத்தில் உள்ள அங்கன்வாடிக்கும், பள்ளிக்கும் சென்று வருகின்றனர்.
சுகாதார வளாக வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் திறந்த வெளியைப் பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது:
எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் 20 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இதுதொடர்பாக எம்எல்ஏ, அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டச் செயலர் சீனிவாசன் கூறியது:
இப்பகுதியில் சாலையோரத்தில் பல ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருகின்றனர். சுகாதார வளாகம் அமைத்தும் தண்ணீர் வசதியில்லை.
குடியிருப்புப் பட்டா வழங்கி தொகுப்பு வீடுகள் கட்டித்தரக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால், அதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு குடிநீர், மின்சாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். குடிநீர்க் குழாய் பதித்துள்ளதாக ஊராட்சி கணக்கில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையில் குடிநீர் வழங்கவில்லை என்றார்.
இதுகுறித்து பூண்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியது:
இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் ஊராட்சியில் ஒவ்வொன்றாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக ஆழ்துளைக் கிணறு அமைத்து, அதிலிருந்து இருளர் காலனிக்கும் குடிநீர் வழங்க குழாய் பதிக்கப்பட்டுள்ளது என்றார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...