திருப்பத்தூர் ஏரியின் நீர்வரத்துக் கால்வாயில் சாலை அமைத்ததால் வீணாகும் மழை நீர்
By து.ரமேஷ் | Published On : 11th September 2019 04:31 AM | Last Updated : 11th September 2019 04:31 AM | அ+அ அ- |

வேலூர் மாவட்டத்தின் 2ஆவது பெரிய ஏரியான திருப்பத்தூர் ஏரியில் அமைக்கப்பட்ட தற்காலிக சாலை அகற்றப்படவில்லை. இதனால், அண்மையில் பெய்த மழைநீர் ஏரிக்குச் செல்லாமல் வீணாக வெளியேறியதாக விவசாயிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
வேலூர் மாவட்டத்திலேயே இரண்டாவது பெரிய ஏரியாக கருதப்படும் திருப்பத்தூர் ஏரி சுமார் 440 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியின் நீர் கொள்ளளவு சுமார் 1.165 மில்லியன் கனமீட்டர் ஆகும்.
இந்த ஏரியைச்சுற்றியுள்ள 18.120 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பெய்யும் மழைநீர் முழுவதும் வந்து சேமிக்கப்படுகிறது. இந்த ஏரிக்கு, அன்னசாகரம் ஏரி, நயனத்தூர் ஏரி, மேல் அச்சமங்கலம் வழியாகவும் ஒரு நீர்வரத்து கால்வாய் உள்ளது. இரண்டாவதாக அக்ரஹாரம் ஏரி, மூக்கனூர் ஏரி வழியாகவும், ஏலகிரி ஏரி மற்றும் அண்ணாண்டப்பட்டி ஏரி வழியாகவும், வெங்காயப்பள்ளி கருப்பனூர் ஏரி வழியாகவும், மாடப்பள்ளி, புதுக்கோட்டை ஏரி வழியாகவும் மொத்தம் 5 வழிகளில் உள்ள நீர்வரத்து கால்வாய்கள் மூலம் மழைநீர் சேமிக்கப்படுகிறது.
நீர்வரத்து கால்வாய் அடைப்பு: இதனிடையே அண்மையில், திருப்பத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கனமழை பெய்தும், பெரிய ஏரி நிரம்பவில்லை. புதுக்கோட்டைஜலகாம்பாறை செல்லும் சாலையில் பெரிய ஏரி அருகே உயர்மட்டப் பாலமும், புதிய தார்சாலை போடும் பணியும் நடைபெற்றது. அப்போது, தடையில்லாத வாகனப் போக்குவரத்துக்காக நீர்வரத்து கால்வாய் வழியாக தற்காலிகச் சாலை அமைக்கப்பட்டது.
தற்போது, சாலை மற்றும் உயர்மட்டப்பாலம் அமைக்கும் பணி முடிவடைந்தது பல நாட்களாகி விட்டன. எனினும், தற்காலிகச் சாலையை அப்புறபடுத்தாத காரணத்தால் ஏரிக்கு வரும் மழைநீர் தடைபட்டுள்ளது. மேலும்,அந்த பகுதிகளில் குப்பைக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பத்தூர் ஏரியில் வளர்ந்திருந்த கருவேல முள்புதர்களை அகற்றிட பல்வேறு சமூக அமைப்புக்கள் மற்றும் வணிக அமைப்புக்கள் இணைந்து தண்ணீர்தண்ணீர் என்னும் சமூக அமைப்பை நிறுவி, பொதுமக்களின் நன்கொடை நிதி பெற்று, அகற்றினர்.
இருப்பினும், கருவேல மரங்களையும், முட்புதர்களையும் அகற்றும் பணி 90 சதவிகிதம் முடிந்துள்ள நிலையில் நிதி பற்றாக்குறையால் இப்பணி நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, தமிழக முதல்வரின் குடி மராமத்துப்பணிக்கான நிதியை திருப்பத்தூர் பெரிய ஏரிக்கு ஒதுக்கீடு செய்து தருமாறு பொதுப்பணித்துறைக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் தண்ணீர்தண்ணீர் அமைப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மனு அளித்திருந்தது.
அதனையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுப்பணித்துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. இருப்பினும், நிதி ஒதுக்கீடு செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென சமூகஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏரியில் கொட்டப்படும் உணவுக்கழிவுகள்: இந்நிலையில், திருப்பத்தூரிலிருந்து மாடப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள ஏரியில் கட்டட கழிவுப் பொருள்கள், கோழி இறைச்சிக் கழிவுகள், உணவகங்களில் மீதமாகும் உணவுகள், எச்சில் இலைகளை கொட்டுவதால் ஏரி மாசுபடுகிறது. மேலும், இரவில் சட்ட விரோதமான செயல்கள் நடைபெறுகிறதாகவும் அப்பகுதிவாசிகள் மற்றும் பொதுமக்கள் வேதனைப்படுகின்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் பி.குமாரிடம் கேட்டதற்கு, ஏரிக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்திற்குள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.