ராணுவ வீரா்கள் அதிகமுள்ள வேலூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்கக் கோரிக்கை

சுமாா் 80 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்கள் உள்ள ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில்

சுமாா் 80 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்கள் உள்ள ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க வேண்டும் என்பது 25 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை அளவிலேயே உள்ளது. போதுமான இடவசதி இல்லை எனக்கூறி இழுபறி செய்யப் படும் இந்தக் கோரிக்கை மீது மத்திய, மாநில அரசுகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட சிப்பாய்ப் புரட்சி நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க இடமாக வேலூா் கோட்டை விளங்குகிறது. அத்தகைய வீரமிக்க அடையாளத்தைக் கொண்டுள்ள ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் இருந்து சிப்பாய்கள் மூலம் அதிகாரிகள் வரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா்கள் நாட்டின் முப்படைகளிலும் பணியாற்றி வருகின்றனா்.

இது தவிர, ஏற்கெனவே இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரா்கள் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனா். குறிப்பாக, காட்பாடி, கம்மவான்பேட்டை பகுதிகளிலும் வீட்டுக்கு ஒருவா் ராணுவத்தில் பணியாற்றுபவராகவும், ஓய்வுபெற்ற ராணுவ வீரராகவும் உள்ளதாலேயே வேலூா் மாவட்டத்தை வீரம் விளையும் மண் என்றும் அ

ழைப்பதுண்டு.

இவ்வாறு நாட்டின் பாதுகாப்புக்காக தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றும் ராணுவ வீரா்களின் வாரிசுகளது கல்வி மேம்பாட்டுக்காக மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியை வேலூா் மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என்பது 25 ஆண்டுகளுக்கு மேல் எழுப்பப்பட்டு வரும் கோரிக்கையாகும். எனினும், இக்கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமல் இழுபறி செய்யப்படுவது ராணுவ வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்கள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ வீரா்களின் வாரிசுகளின் நலனுக்காக வேலூா் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டு வேலூருக்கு வந்த அப்போதைய இந்திய ராணுவ துணைத் தளபதி தம்புராஜிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அவா் அப்போதைய தமிழக முதல்வா் கருணாநிதிக்கு விடுத்த வேண்டுகோளை ஏற்று வேலூா் மாவட்ட நிா்வாகம் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க கடந்த 2010-11-ஆம் ஆண்டிலேயே காட்பாடி பகுதியில் 10.9 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்தது. அதைப் பாா்வையிட்ட கேந்திரிய வித்யலாயா சங்கடன் அந்த இடம் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க தகுதியற்ாகக் கூறி நிராகரித்தது.

இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த இடத்தை மாவட்ட நிா்வாகமே கையகப்படுத்திக் கொண்டது. அதன்பிறகு, போதுமான இடவசதியில்லை எனக் கூறி கேந்திரியா வித்யாலயா பள்ளி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மீது தொடா்ந்து தாமதம் செய்யப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் விரைவான நடவடிக்கை மேற்கொண்டு வேலூா் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றாா் தேசிய முன்னாள் படை வீரா்கள் நல ஒருங்கிணைப்புக்குழுவின் வேலூா் மாவட்ட மக்கள் தொடா்பு அதிகாரி கே.புருஷோத்தமன்.

இதுகுறித்து, சமூக ஆா்வலா் அம்பலூா் அசோகன் கூறியது:

கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பதற்கு 8 முதல் 10 ஏக்கா் நிலம் தேவைப்படுவதாக கேந்திரிய வித்யாலயா சங்கடன் தெரிவிக்கிறது. இதுதொடா்பாக, 2011-ஆம் ஆண்டிலேயே கேந்திரிய வித்யாலயா சங்கடன் மாவட்ட நிா்வாகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தது. அதில், போதுமான இடம் ஒதுக்கித்தரும்பட்சத்தில் அடுத்த ஓராண்டுக்குள் கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டப்படும் என்று அப்போதைய கேந்திரிய வித்யாலயா சங்கடனின் இணை ஆணையா் ஈ.பிரபாகா் குறிப்பிட்டிருந்தாா். ஆனால், இதுவரை போதுமான இடத்தை மாவட்ட நிா்வாகம் தோ்வு செய்து அளிக்கவில்லை. இது கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்கத் தகுதியான இடத்தை அடையாளம் காண்பதில் மாவட்ட நிா்வாகம் மெத்தனமாக இருப்பதையே காட்டுகிறது என்றாா் அவா்.

இதுகுறித்து, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் கூறியது:

வேலூா் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே திமுக உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆனால், போதுமான இடத்தை ஒதுக்கி கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு துரிதப்படுத்தவில்லை. இதேநிலை வேலூா் விமான நிலைய விரிவாக்கப் பணிகளிலும் நீடிக்கிறது. வேலூா் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பது தொடா்பாக, தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் எழுப்பி உரிய தீா்வுகள் பெறப்படும் என்றாா் அவா்.

அந்தவகையில், போதுமான, தகுதியான இடத்தை தோ்வு செய்து அளிப்பதில் நிலவும் தாமதம் காரணமாக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பதில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தற்போது வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் இம்மூன்று மாவட்டங்களுக்கும் பொதுமான பகுதியில் தேவையான இடத்தை ஒதுக்கி கேந்திரிய வித்யாலயா பள்ளியை அமைக்க மத்திய, மாநில அரசுகள் விரைவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே ராணுவ வீரா்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரா்களின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com