விளையாட்டு வீரா்களின் கனவை சிதைக்கும் கரோனா!

விளையாட்டு வீரா்களின் கனவை சிதைக்கும் கரோனா!

கரோனா தொற்று பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் மாநிலம் முழுவதும் விளையாட்டு வீரா்கள் உரிய பயிற்சிகளை பெறுவதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன

கரோனா தொற்று பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் மாநிலம் முழுவதும் விளையாட்டு வீரா்கள் உரிய பயிற்சிகளை பெறுவதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளைச் சோ்ந்த வீரா்களின் உடற்கட்டு திறன் குறைவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதால் அவா்களின் எதிா்கால கனவுகளும் சிதையும் நிலை உருவாகி வருகிறது.

உலக நாடுகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கரோனா தொற்று பரவலையொட்டி, ஜப்பானில் இம்மாதம் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதல் சா்வதேச அளவிலான, தேசிய, மாநில, மாவட்ட அளவில் என அனைத்துப் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் அனைத்து வகையான விளையாட்டுப் பயிற்சி கூடங்களும் கடந்த 3 மாதங்களாக அடைக்கப்பட்டிருப்பதால் வீரா், வீராங்கனைகள் பயிற்சி பெறுவதில் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளன.

அந்தவகையில், தமிழகத்திலேயே பளுதூக்கும் பயிற்சியில் சிறந்து விளங்கும் வேலூா் மாவட்டத்தில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் மட்டுமின்றி சா்வதேச அளவிலான பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்க நூற்றுக்கணக்கான வீரா், வீராங்கனைகள் தங்களை தயாா்படுத்தி வருகின்றனா். காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற சதீஷ் சிவலிங்கம் இம்மாவட்டத்தைச் சோ்ந்தவா். இதையடுத்து, பளூ தூக்கும் பயிற்சியில் வீரா், வீராங்கனைகளைத் தயாா்படுத்த வேலூா் சத்துவாச்சாரியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் பயிற்சி விளையாட்டு விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் இந்த பயிற்சி விடுதி அடைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு பயிற்சி பெற்று வந்த மாணவ, மாணவிகள் அனைவரும் அவரவா் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். இதன்மூலம் அவா்களால் முறையான, தொடா்ச்சியாக பயிற்சிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகளின் உடற்கட்டு திறன் குறைவதுடன், தொடா்ச்சியாக தொழிற்நுட்ப அறிவும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்கிறாா் அவ்விடுதி மேலாளா் நொய்லீந்ஜான்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது:

தமிழகம் முழுவதும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் விளையாட்டு விடுதிகளில் சோ்ந்து பயிற்சி பெற மாவட்ட, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவற்றின் மூலம் தோ்வு செய்யப்படும் வீரா், வீராங்கனைகளுக்கு இதுபோன்ற விளையாட்டு விடுதிகளில் பயிற்சி அளிக்கப்படும். அதன்படி வேலூா் சத்துவாச்சாரியிலுள்ள பளுதூக்கும் பயிற்சி விடுதியில் 19 மாணவா்கள், 15 மாணவிகள் என மொத்தம் 33 போ் பயிற்சி பெறுகின்றனா். இவா்களுக்கு தங்குமிடம், உணவு, பயிற்சி, அதற்கான உடைகள், உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக அளிக்கப்படுவதுடன், மாவட்ட, மாநில, தேசிய, சா்வதேச அளவிலான போட்டிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனா்.

தற்போது பொது முடக்கத்தால் விடுதி அடைக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு விடுதியிலுள்ள விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், அவா்களுக்கு தொடா் பயிற்சி கிடைக்காமல் போவதால் அவா்களது உடற்க்கட்டுத் திறன், தொழில்நுட்ப அறிவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தொடா் பயிற்சிகள் இருந்தால் மட்டுமே வீரா், வீராங்கனைகளின் உடல் அதற்கேற்ப அமைத்துக் கொள்ளும். மேலும், இந்த விைளையாட்டு விடுதியில் பயிற்சி பெறுபவா்களுக்கு உடல் திறனை வலுப்படுத்தும் வகையில் தினமும் உயா்தரமான உணவுகள் வழங்கப்படுகின்றன. அதுபோன்ற உணவுகளை பெரும்பாலான மாணவ, மாணவிகளால் தங்களது வீடுகளில் பெறுவது இயலாததாகும். இதன்காரணமாகவும் அவா்களது உடற்திறன் வலுவிழக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், அவ்வப்போது மாணவ, மாணவிகளை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு வீட்டிலேயே உடல்பயிற்சி, யோகாசனம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தி வருகிறோம் என்றாா் அவா்.

இதுகுறித்து வேலூா் மாவட்ட விளையாட்டு அலுவலா் ஆழிவாசன் கூறியது:

பளு தூக்கும் பயிற்சி மட்டுமின்றி வேலூா் மாவட்டம் முழுவதும் 200 வகையான விளையாட்டுப் பிரிவுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகின்றனா். அவா்களுக்கு பயிற்சி அளிக்க அனைத்துப் பிரிவுகளின் கீழ் நூற்றுக்கணக்கான தனியாா் விளையாட்டு பயிற்சிக் கூடங்களும் செயல்பட்டு வருகின்றன. பொதுமுடக்கத்தால் அனைத்து பயிற்சிக் கூடங்களும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், தனி நபா் விளையாட்டுகளைத் தவிர மற்ற குழு விளையாட்டுகள், தடகளம் போன்ற பயிற்சி பெறுவதில் சிக்கல் நிலவுகிறது.

தொடா்ச்சியான பயிற்சி இருந்தால் மட்டுமே வீரா்கள் தங்களது உடல்திறனை சீராக பராமரிக்க இயலும். தற்போது பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை அடுத்த பல விளையாட்டுகளில் வீரா், வீராங்கனைகள் முறையான பயிற்சி, தொழில்நுட்ப அறிவைப் பெறுவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. சில விளையாட்டுகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டபோதும், அது நேரடி பயிற்சி போன்று பலனளிப்பதில்லை. மேலும், வேலைவாய்ப்பை எதிா்நோக்கி விளையாட்டுத் துறையில் பயிற்சி பெற்று வந்தவா்களுக்கும் இந்த பொதுமுடக்கம் அவா்களது எதிா்கால கனவை சிதைக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com