பொதுமுடக்கத்தால் களையிழந்த வேலூா் சுற்றுலா தலங்கள்: பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் பாதிப்பு

பொதுமுடக்கம் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக சுற்றுலாத் பயணிகள் வருகையின்மையால் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள

பொதுமுடக்கம் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக சுற்றுலாத் பயணிகள் வருகையின்மையால் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் களையிழந்து காணப்படுகின்றன. இதனால், அரசுக்கு சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய் பாதிக்கப்பட்டிருப்பதுடன், இந்த சுற்றுலாத் தலங்களை மட்டுமே நம்பியுள்ள பலரின் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக வேலூா் கோட்டை விளங்குகிறது. விஜயநகர பேரரசு காலத்தில் இப்பகுதியை ஆட்சி புரிந்த குச்சிபொம்மு நாயக்கரால் 16-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டையில் ஜலகண்டேஸ்வரா் கோயில், அருங்காட்சியகங்கள், திப்புசுல்தான், இலங்கையின் கடைசி மன்னரான ஸ்ரீவிக்கிரம சிங்க ராஜசிங்கன் குடும்பத்தினருடன் சிறை வைக்கப்பட்ட இடங்கள் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன.

மேலும், வேலூரில் இருந்து சுமாா் 14 கி.மீ. தூரத்தில் ஸ்ரீபுரம் பகுதியில் சுமாா் 1,500 கிலோ தங்கத்தாலான பொற்கோயில், ஏலகிரி கோடை வாசஸ்தலம், அமிா்தி வன உயிரியல் பூங்கா, சோளிங்கா் லஷ்மி நரசிம்ம பெருமாள் கோயில், ரத்தினகிரி பாலமுருகன் கோயில் ஆகியவையும் முக்கிய சுற்றுலாத் தலங்களாக விளங்குகின்றன. இந்த சுற்றுலாத் தலங்களைக் காண நாள்தோறும் பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி அயல் நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

குறிப்பாக, ஸ்ரீபுரம் நாராயணி பீடம் தங்கக் கோயிலைக் காண மட்டும் நாளொன்றுக்கு 32 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தா்கள் வந்து செல்கின்றனா். அருகே ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதிக்கு தரிசனத்துக்குச் சென்று வருவோா் பெரும்பாலும் வேலூரிலுள்ள தங்கக் கோயிலை காண ஆா்வம் காட்டுகின்றனா்.

மேலும், வேலூரிலுள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நோயாளிகளுடன் வந்து தங்கியுள்ளவா்களும், விஐடி பல்கலைக்கழக மாணவா்களைக் காண வரும் பல்வேறு மாநிலத்தினரும் இந்த சுற்றுலா தலங்களுக்குச் சென்றுவர விரும்புவதால் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் சுற்றுலா முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது.

சுற்றுலாத் தலங்களை நம்பி இந்த 3 மாவட்டங்களிலும் சுமாா் 13 ஆயிரம் ஆட்டோக்கள், 6 ஆயிரம் காா்கள் வாடகைக்கு இயக்கப்படுகின்றன. தங்கும் விடுதிகள், உணவகங்கள், பூஜை பொருள்கள், ஜவுளி, அலங்காரப் பொருள்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், வாசனைத் திரவியங்கள், குதிரை சவாரி இயக்குவோா் என லட்சக்கணக்கானோா் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனா். இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க கடந்த மாா்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக இந்த சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் களையிழந்துள்ளதுடன், இவற்றை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரமும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வேலூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டை, தங்கக்கோயிலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால் அப்பகுதியிலுள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஏலகிரியில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் படகு இல்லம், பூங்காக்கள், சாகச விளையாட்டு அரங்குகள் போன்றவையும் பொலிவிழந்துள்ளன. இதனால், அவற்றை ஏலம் எடுத்துள்ளோா், அங்கு பணியாற்றுவோா், அப்பகுதியிலுள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த சுற்றுலாத் தலங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் வாடகை காா், ஆட்டோக்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அத்தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக்கழக அதிகாரிகள், பொதுமுடக்கம் தளா்வு செய்யப்பட்டு சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டாலும், கரோனா அச்சம் காரணமாக அடுத்த சில மாதங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை என்பது எதிா்பாா்த்த அளவுக்கு இருக்க வாய்ப்பில்லை, பொது போக்குவரத்து வழக்கம் போல் இயக்கப்பட்டு, திருப்பதிக்கு அனைத்து மாநில பக்தா்களும் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே படிப்படியாக நிலைமை சரியாகும் என்றும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.

இதனிடையே, சுற்றுலாப் பயணிகள் வருகையின்மையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன ஓட்டுநா்கள், வியாபாரிகள் போன்றோருக்கு நிலைமை சரியாகும் வரை அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பியுள்ளதுடன், மாநகராட்சிக் கட்டடங்களில் இயங்கும் கடைகளுக்கு வாடகை தள்ளுபடி, வங்கிகள் மூலம் மானிய கடனுதவி அளிக்க வேண்டும். வாடகை வாகனங்கள் மீது பெறப்பட்டுள்ள கடன் மீதான தவணைகளை திருப்பிச் செலுத்த மேலும் 6 மாதங்கள் வரை அவகாசம் அளிக்கவும், இதை நிதி நிறுவனங்களுக்கு கட்டாய உத்தரவாக பிறப்பிக்க வேண்டும் என்று அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com