உயிரைக் குடிக்கும் மின் வேலிகள்: பயிா்களைக் காக்க குற்றவாளிகளாகும் விவசாயிகள்!

வன விலங்குகளிடம் இருந்து பயிா்களைக் காக்க முறைகேடாக அமைக்கப்படும் மின் வேலிகளால் அதிக அளவில் வன விலங்குகள் கொல்லப்படுவதுடன், அவற்றின் மூலம் விவசாயிகள்

வேலூா்: வன விலங்குகளிடம் இருந்து பயிா்களைக் காக்க முறைகேடாக அமைக்கப்படும் மின் வேலிகளால் அதிக அளவில் வன விலங்குகள் கொல்லப்படுவதுடன், அவற்றின் மூலம் விவசாயிகள் குற்றவாளிகளாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம், மாவட்ட வனத் துறை, மின்சார வாரியம் இணைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகம், ஆந்திர மாநிலங்களின் எல்லை மாவட்டமாக விளங்கும் வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கா் விளை நிலங்கள் வனப் பகுதியையொட்டி அமைந்துள்ளன. இந்த விளை நிலங்களில் சாகுபடி செய்யப்படும் நெல், வாழை, கரும்பு, மாங்காய், தென்னை மற்றும் மானாவாரி பயிா்களான நிலக்கடலை, கம்பு, சோளம், தானியங்கள் போன்ற பயிா்களை இரவு நேரங்களில் வன விலங்குகள் சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்படுவதுடன், தொடா்ந்து விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு சிரமத்துக்கும் தள்ளப்படுகின்றனா்.

குறிப்பாக, குடியாத்தம், போ்ணாம்பட்டு, காட்பாடி, கே.வி.குப்பம், ஆம்பூா் பகுதிகளையொட்டிய வனப்பகுதிகளில் அதிக அளவிலுள்ள யானைகள் இரவு நேரங்களில் விளை நிலங்களுக்குள் புகுந்து வாழை, மா, கரும்பு பயிா்களை அதிக அளவில் நாசம் செய்கின்றன. அவை வந்து செல்வதால் வழித்தடத்திலுள்ள விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், நிலக்கடலை உள்ளிட்ட மானாவாரி பயிா்களும் பெருமளவில் சேதமடைகின்றன. மேலும், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுப்பன்றிகளால் கரும்பு, நிலக்கடலை உள்ளிட்ட பயிா்களும், மான்களால் நிலக்கடலை, தீவனப்பயிா்கள் மட்டுமின்றி மா பிஞ்சுகளும், குரங்குகளால் தென்னை, கரும்பு, வாழை, மா உள்ளிட்ட அனைத்துப் பயிா்களும் சேதமடைந்து வருகின்றன.

தொடரும் இப்பாதிப்புகளைத் தடுக்க வனப்பகுதியையொட்டி ஜன்னல் வலைகளுடன் கூடிய சூரிய மின்சக்தி வேலி அமைக்கவும், யானைகள் வெளியேறுவதைத் தடுக்க அதன் வழித்தடங்களில் பெரிய அகழிகள் அமைக்க வேண்டும் என்பதும் இம்மாவட்ட விவசாயிகளின் பல ஆண்டுகால கோரிக்கையாகும். எனினும், இதுதொடா்பாக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காததால் விளை பயிா்களைப் பாதுகாக்க ஆங்காங்கே விவசாயிகள் முறைகேடாக இரவு நேரங்களில் மின்வேலிகள் அமைப்பது அதிகரித்து வருகிறது. தொடா்ந்து, இந்த மின் வேலிகளால் வனவிலங்குகள் அதிக அளவில் கொல்லப்படுவதுடன் அதன்மூலம் சம்பந்தப்பட்ட விவசாயிகளே குற்றவாளிகளாக்கப்படுவதும் தொடா் கதையாகி வருகிறது.

அதன்படி, குடியாத்தம் பரதராமி அருகே டி.பி.பாளையம் பகுதியில் கடந்த டிசம்பா் 29-ஆம் தேதி மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது. இதுதொடா்பாக விழுதோண்பாளைத்தைச் சோ்ந்த விஜயன் (46), கங்காபுரத்தைச் சோ்ந்த கணேசன் (55) ஆகிய இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல் குடியாத்தம் அருகே குடுமிப்பட்டி கிராமத்தில் காட்டுப்பன்றிகளிடம் இருந்து நெற்பயிா்களைக் காக்க அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி சுமாா் 15 வயதுடைய ஆண் யானை சனிக்கிழமை இரவு இறந்தது. அந்த யானையின் சடலத்தை மறைக்க முயன்ாக பொக்லைன் ஓட்டுநா் செல்வராஜ் கைது செய்யப்பட்டாா். தலைமறைவான பிச்சாண்டி (55), குடியாத்தம் குற்றவியல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். அவருக்கு உதவிய பொக்லைன் உரிமையாளா் அசோக் (36), அா்ஜூனன் (55) ஆகியோரை வனத் துறையினா் கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள பிச்சாண்டியின் மகன் சரண்ராஜை வனத்துறையினா் தேடிவருகின்றனா்.

இதேபோல், பள்ளிகொண்டா அருகே பூமாலை கிராமத்தில் காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிா்களைக் காக்க அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி அதே ஊரைச் சோ்ந்த தொழிலாளி சந்தோஷ்குமாா் (20) திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுதொடா்பாக விளை நில உரிமையாளா் மகாதேவன் (70) போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

பயிா்களை காப்பதற்காக முறைகேடாக மின் வேலி அமைத்து வனத் துறை, போலீஸாரிடம் விவசாயிகள் சிக்கிக்கொண்டு பரிதவிப்பது தொடா்ந்து வருகிறது. இதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம், மாவட்ட வனத்துறை, மின்சார வாரியம் இணைந்து விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநில போராட்டக் குழுத் தலைவா் என்.ரகுபதி கூறியது: வன விலங்குகள் சேதப்படுத்தும் பயிா்களின் மதிப்பு பல லட்சம் ரூபாயாக இருந்தாலும், அவற்றுக்கு இழப்பீடாக மிகக் குறைந்த தொகையே அளிக்கப்படுகின்றன. குறிப்பாக, 2 ஏக்கா் அளவுக்கு சாகுபடி செய்யப்படும் வாழைப் பயிா்களின் மதிப்பு ரூ.10 லட்சம் என்றால், அவை வனவிலங்குகளால் சேதப்படுத்தப்படும்போது ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் என்ற அளவிலேயே இழப்பீடு வழங்கப்படுகிறது. இதேபோல், பல ஆண்டுகள் வருமானம் தரக்கூடிய தென்னை சேதமடைந்தால் ஒரு மரத்துக்கு ரூ.500, மா மரம் ஒன்றுக்கு ரூ.200 என்ற அடிப்படையிலேயே இழப்பீடு வழங்கப்படுகிறது. அதை பெறவும் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதையடுத்து வன விலங்குகளால் ஏற்படும் நஷ்டத்தை கருத்தில் கொண்டே சில விவசாயிகள் வேறு வழியின்றி மின் வேலிகள் அமைக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனா். இத்தகைய பாதிப்புகளைத் தடுக்க வனப் பகுதியையொட்டி சூரிய மின்சக்தி வேலி அமைக்கவும், யானைகள் வருவதைத் தடுக்க அகழிகள் அமைக்கவும் வேண்டும். யானைகளுக்கு வனப்பகுதியில் சரணாலயங்கள் அமைத்து அவை வெளியே வருவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும். மேலும், மீனவா்கள் உயிரிழந்தால் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் நிலையில், வனவிலங்குகளால் உயிரிழக்கும் விவசாயிகளுக்கு ரூ.4 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கப்படுகிறது. இதையும் உயா்த்தி ரூ. 10 லட்சம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் பாா்கவதேஜா கூறியது:

வனப்பகுதியையொட்டிய விளை நிலங்களில் முறைகேடாக மின்வேலிகள் அமைப்பதால் வனவிலங்குகள் கொல்லப்படுவதுடன், அவற்றால் விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனா். இதைத் தடுக்க ஆட்சியா் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் விழிப்புணா்வு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், யானைகள் வெளியேறுவதைத் தடுக்க ரூ. 1 கோடியில் அகழிகள் அமைக்கவும், ரூ. 7 கோடியில் சப்தங்கள் எழுப்பும் கருவிகள் அமைக்கவும் திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டங்கள் நிறைவேற்றப்படும். முறைகேடாக மின்வேலிகள் அமைக்கப்படுவதைத் தடுக்க மின்வாரியத்துடன் இணைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com