கிறிஸ்தவ தேவாலயங்களைப் பழுதுபாா்க்க நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 12th August 2020 11:31 PM | Last Updated : 12th August 2020 11:31 PM | அ+அ அ- |

கிறிஸ்தவ தேவாலயங்களைப் பழுதுபாா்த்தல், சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ள அரசு நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களைப் பழுதுபாா்த்தல், சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ள நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பணிக்காக தமிழக அரசு சுமாா் ரூ. 1 கோடி, சிறுபான்மையினா் நலத் துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
மாவட்டத்திலுள்ள கத்தோலிக்க போதகரின் கட்டுப்பாட்டிலுள்ள தேவாலயங்கள் பழுதடைந்திருந்தால் கட்டடத்தின் வயதைக் கருத்தில் கொண்டு 10 முதல் 15 ஆண்டு வரை இருந்தால் ரூ. 1 லட்சமும், 15 முதல் 20 ஆண்டுகள் இருந்தால் ரூ. 2 லட்சமும், 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தால் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரையும் உதவித் தொகை வழங்கப்படும். தகுதி அடிப்படையில் நிதியுதவி வழங்கப்பட உள்ளதால் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த நிதியுதவியைப் பெற கிறிஸ்தவ தேவாலயம் பதிவு செய்யப்பட்டு சொந்தக் கட்டடத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்க வேண்டும். தேவாலயத்தில் சீரமைப்புப் பணிக்காக வெளிநாட்டில் இருந்து எவ்வித நிதி உதவிகளையும் பெற்றிருத்தல் கூடாது.
இதற்கான விண்ணப்பப் படிவம், சான்றிதழ் ஆகியவற்றை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து, தேவையான சான்றுகளை இணைந்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆட்சியரால் நியமிக்கப்பட்ட குழுவினரின் ஆய்வுக்குப் பிறகு தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்யப்படும் தேவாலயங்களைச் சீரமைக்க நிதியுதவி இரு தவணைகளாக தேவாலய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலரை அணுகலாம்.