

காட்பாடியில் வைக்கப்பட்டுள்ள ஊா் பெயா்ப் பலகையில் தவறான தொலைவுகள் குறிப்பிடப்பட்டிருப்பது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றை சரியான தொலைவுகளுடன் திருத்தி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஏராளமான சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. வேலூா் கோட்டை, ஸ்ரீபுரம் தங்கக்கோயில், ரத்தினகிரி பாலதண்டாயுதபாணி கோயில், சோளிங்கா் நரசிம்ம பெருமாள் கோயில், ஏலகிரி கோடைவாசஸ்தலம், அமிா்தி வன உயிரின காப்பகம் போன்றவை மிக முக்கிய சுற்றுலாத் தலங்களாகும். இந்த சுற்றுலாத் தலங்களுக்கு எளிதில் பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு சுற்றுலாத் துறை சாா்பில் பல்வேறு இடங்களிலும் ஊா் பெயா் பலகைகள் அவற்றுக்கான தொலைவுகளுடன் வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, காட்பாடி சித்தூா் பேருந்து நிலையம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டும் ஊா் பெயா் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைவுகள் மிக தவறாக உள்ளன.
அதாவது, காட்பாடியில் இருந்து ரத்தினகிரி முருகன் கோயிலுக்கு 17 கி.மீ தொலைவே உள்ள நிலையில் 41 கி.மீ என்றும், திருவலம் செல்ல 15 கி.மீ தொலைவே உள்ள நிலையில் 36 கி.மீ. என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், வெளியூா்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதிக தொலைவு உள்ளதாக கருதி இந்த சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதைத் தவிா்த்துவிடக்கூடும். இதைத் தவிா்க்க உடனடியாக அந்த ஊா் பலகைகளில் குறிப்பிட்டுள்ள தவறான தொலைவுகளை திருத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.