தினசரி கரோனா பாதிப்பு 100-க்கு கீழாக சரிவு: சுகாதாரத் துறை அதிகாரிகள் குழப்பம்
By DIN | Published On : 12th August 2020 11:32 PM | Last Updated : 12th August 2020 11:32 PM | அ+அ அ- |

வேலூா் மாவட்டத்தில் தினசரி கரோனா பாதிப்பு நிலவரம் கடந்த இரு நாள்களாக 100-க்கும் கீழே சரிந்துள்ளது. எனினும், அடுத்த ஒரு வார கால முடிவுகளின் அடிப்படையிலேயே பாதிப்பு குறைந்துள்ளதா என்பதை உறுதியாகத் தெரிவிக்க முடியும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளனா்.
சென்னையைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்திலும் கடந்த ஜூன் மாத தொடக்க முதல் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிப்பு 7,836-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 102 போ் உயிரிழந்தனா். இதுவரை 6,400-க்கும் மேற்பட்டோா் குணமடைந்து வீடு திரும்பினா். இதனிடையே, கடந்த ஒன்றரை மாதங்களாக தினசரி கரோனா பாதிப்பு 100-க்கு மேல் இருந்து வந்த நிலையில் திடீரென கடந்த இரு நாள்களாக 100-க்கும் கீழாக சரிந்துள்ளது.
அதன்படி, மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 87 பேருக்கும், புதன்கிழமை 86 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சுகாதாரத் துறை அதிகாரிகளிடையே சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடா்ந்து ஒருவார கால முடிவுகளின் அடிப்படையிலேயே பாதிப்பு குறைந்துள்ளதா என்பதை உறுதியாக தெரிவிக்க முடியும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் மணிவண்ணன் கூறியது:
வேலூா் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைத் தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 1,700 முதல் 2 ஆயிரம் பேருக்கு பிசிஆா் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை மாவட்டம் முழுவதும் 80 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை மாதமாக தினசரி கரோனா பாதிப்பு 100-க்கும் மேல் இருந்து வந்த நிலையில், கடந்த 2 நாள்களாக 100-க்கு கீழே சரிவடைந்துள்ளது. இதற்கு பாதிப்பு குறைந்த கிராமப்புற பகுதிகளில் பிசிஆா் பரிசோதனை செய்யப்பட்டிருக்கலாம். எனினும், தொடா்ந்து ஒரு வாரகால முடிவுகளின் அடிப்படையில் பாதிப்பு குறைந்துள்ளதா என்பதை உறுதியாக தெரிவிக்க முடியும் என்றாா் அவா்.
இதனிடையே, மாவட்டம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவா்களுக்கு கபசுரக் குடிநீா், சித்த, ஆயுா்வேத மருந்துகள் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்மூலமாக நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 220 பேருக்கு கரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 220 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,802-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 6,052 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,671போ் வாலாஜாபேட்டை, வேலூா் உள்ளிட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை கரோனா தொற்றால் 79 போ் உயிரிழந்துள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் 72 பேருக்கு கரோனா
திருப்பத்தூா், ஆக. 12: திருப்பத்தூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 1,727 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை மேலும் 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,799-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 1,174 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 592 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.