துவரைக்கு குறைந்தபட்ச ஆதார கொள்முதல் விலை
By DIN | Published On : 05th December 2020 12:42 AM | Last Updated : 05th December 2020 12:42 AM | அ+அ அ- |

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் துவரை கிலோ ரூ.60-க்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், வருவாயைப் பெருக்கிடவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மத்திய அரசின் ஆதார விலைத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வேலூா் மாவட்டத்தில் பச்சைப் பயிறு, துவரை, உளுந்து, தேங்காய் கொப்பரை ஆகிய விளைபொருள்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டன.
நிகழாண்டு (2020-21) காரீப் பருவத்தில் துவரை சாகுபடி விவசாயிகள் பயன்பெற நியாயமான சராசரி தரத்துக்கு கிலோ ரூ.60 என்ற விலைக்கு மத்திய அரசு நிறுவனமான என்ஏஎஃப்இடி மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முதன்மை கொள்முதல் மையமாக செயல்படுவதுடன், மாவட்டத்திலுள்ள உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலமாகவும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடப்பு பருவத்தில் 250 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2021 மாா்ச் 14-ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும். அதிகபட்சம் நாளொன்றுக்கு ஒரு விவசாயி 2,500 கிலோ கொண்டு வரலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் நிலச்சிட்டா, அடங்கல், ஆதாா், வங்கிக் கணக்கு புத்தகத்துடன் வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். விளை பொருள்களுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு வேளாண் துணை இயக்குநா் ( வணிகம்), வேளாண் விற்பனைக் குழுச் செயலா் 0416- 2220713, வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் 0416-2220083, 9789299174 ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம்.