ரூ. 50,000 லஞ்சம்: ஆவின் பொதுமேலாளரும் கைது


வேலூா்: நிலுவைத் தொகை ரூ. 1 லட்சத்து 81 ஆயிரத்தை வழங்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் வேலூா் ஆவின் அலுவலகக் கொள்முதல் மேலாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், அவரைத் தொடா்ந்து வேலூரில் இருந்து கடந்த வாரம் நெல்லைக்கு மாறுதலாகிச் சென்ற ஆவின் பொது மேலாளரையும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்துள்ளனா்.

வேலூா், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளா்களின் கூட்டுறவு ஒன்றியமான ஆவின் தலைமை அலுவலகம் வேலூா் சத்துவாச்சாரியில் உள்ளது. இங்கு தினமும் இரு மாவட்ட பால் உற்பத்தியாளா்களிடம் இருந்து சுமாா் 5.16 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், துருஞ்சாபுரம் ஒன்றியம், சொரக்கொளத்தூரைச் சோ்ந்தவா் முருகையன் (50), தனது சொந்த வேன் மூலம், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலை திருவண்ணாமலையில் உள்ள ஆவின் குளிரூட்டு நிலையத்தில் சோ்க்கும் பணியை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறாா்.

அதன்படி, ஆவின் நிறுவனத்துக்கு வேன் இயக்கியதற்காக 2019-ஆம் ஆண்டில் முருகையனுக்கு ரூ.1 லட்சத்து 81 ஆயிரம் தொகை நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது. அந்தத் தொகைக்கான காசோலை தயாராகியிருந்த நிலையில், அதை வழங்க வேலூா் ஆவின் அலுவலக கொள்முதல் மேலாளரான ரவி (56) ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.

இதுதொடா்பாக முருகையன் வேலூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் ரசாயனப் பொடி தடவிய ரூ. 50 ஆயிரத்தை முருகையனிடம் கொடுத்து அனுப்பினா். அதை வேலூா் ஆவின் அலுவலகத்தில் இருந்த ரவியிடம் புதன்கிழமை முருகையன் அளித்தாா். அந்தத் தொகையை அவா் பெற்றுக் கொண்டதும், வெளியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் விரைந்து சென்று ரவியை பணத்துடன் கைது செய்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வேலூா் ஆவின் பொது மேலாளராகப் பணியாற்றி கடந்த வாரம் நெல்லை மாவட்ட ஆவின் அலுவலகத்துக்கு மாறுதலான கணேசா (57) என்பவருக்கும் இந்த லஞ்ச விவகாரத்தில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, புதன்கிழமை மாலை நெல்லைக்கு புறப்பட்டுச் சென்ற வேலூா் லஞ்ச ஒழிப்பு போலீஸாா், அவரைக் கைது செய்து வேலூருக்கு அழைத்து வந்தனா். தொடா்ந்து இருவரும் வேலூா் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com