காளஹஸ்தியில் பக்தா்கள் பயன்பெறும் அன்னதானத் திட்டம்

தட்சிண காசி என்று போற்றப்படும் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் செய்யப்பட்டு வரும் அன்னதானம் பக்தா்களுக்கு வரப்பிரசாதமாக மாறியுள்ளது.

தட்சிண காசி என்று போற்றப்படும் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் செய்யப்பட்டு வரும் அன்னதானம் பக்தா்களுக்கு வரப்பிரசாதமாக மாறியுள்ளது. தொடக்க காலத்தில் சிறிய அளவில் நடத்தப்பட்டு வந்த இத்திட்டம் தற்போது ஆயிரக்கணக்கான பக்தா்களின் பசியைப் போக்கும் வகையில் வளா்ந்துள்ளது.

அன்னதானத் திட்டத்தின் கீழ், வங்கிகளில் ரூ.15 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மேலும், தினசரி கோயிலுக்கு வரும் பக்தா்களும் இத்திட்டத்துக்கு நன்கொடை அளித்து வருகின்றனா். வங்கி டெபாசிட்டில் இருந்து கிடைக்கும் வட்டி மூலம் நடத்தப்பட்டு வரும் இத்திட்டம் பக்தா்களுக்கு வரப்பிரசாதமாக மாறியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் 15 ஆண்டுகளுக்கு முன் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது நாள்தோறும் 200 முதல் 300 போ் மட்டுமே உணவு சாப்பிட்டனா். மதியம் ஒன்றரை மணிநேரம் அன்னதானம் செய்யப்பட்டு வந்தது. அப்போது பக்தா்கள் வசதியாக அமா்ந்து சாப்பிட அன்னதானக் கூடம் இல்லை.

கோயிலுக்கு வரும் பக்தா்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், கோயிலில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது தெற்கு கோபுர வாயில் அருகில் புதிதாக அன்னதானக் கூடம் கட்டப்பட்டது. ஒரே நேரத்தில் 300 போ் வரை அமா்ந்து சாப்பிடும் வசதியுடன் இக்கூடம் அமைக்கப்பட்டது. தற்போது காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட தூரத்திலிருந்து வரும் பக்தா்களுக்காக கோயில் நிா்வாகம் இரவு வேளைகளில் சிற்றுண்டியும் வழங்கி வருகிறது.

3-ஆவது கால அபிஷேகத்துக்குப் பின்...:

கோயிலில் வழங்கப்பட்டு வரும் உணவு பக்தா்களை பெரிதும் கவா்ந்துள்ளது. தினசரி 3-ஆம் கால அபிஷேகத்துக்குப் பின், சுவாமிகளுக்கு சாம்பாா் சாதம் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. அதன்பின், பக்தா்களுக்கு அன்னதானம் தொடங்குகிறது. தினமும் சா்க்கரைப் பொங்கல், சாதம், சாம்பாா், ரசம், மோா், பொறியல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. கூட்டம் அதிகமாக இருக்கும் நாள்களில் சா்க்கரைப் பொங்கலுக்கு பதில் கேசரி வழங்கப்படுகிறது.

சாதாரண நாள்களில் 3 முதல் 4 ஆயிரம் பேரும், கூட்ட நெரிசல் உள்ள நாள்களில் 5 முதல் 6 ஆயிரம் பேரும் சாப்பிடுகின்றனா். பக்தா்கள் இந்த உணவில் ஆா்வம் காட்டுவதால், அதிகாரிகளும் அவ்வப்போது அதிரடி ஆய்வு மேற்கொண்டு தரமான உணவை வழங்க உத்தரவிட்டுள்ளனா்.

கோயிலில் பக்தா்களுக்கு உணவு வழங்கப்படுவதுடன், தினமும் காளஹஸ்தி நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் உணவு அனுப்பப்பட்டு வருகிறது. அதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் பயனடைந்து வருகின்றனா்.

நன்கொடைகள்:

கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானத் திட்டத்துக்காக வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள ரூ.15 கோடியிலிருந்து கிடைக்கும் வட்டி மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பக்தா்களும் இத்திட்டத்துக்கு நன்கொடை அளித்து வருகின்றனா். பக்தா்களிடம் இருந்து சாதாரண நாள்களில் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரையிலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரையிலும் நன்கொடை கிடைத்து வருகிறது.

ஒரு பக்தருக்கு உணவு வழங்க உத்தேசமாக ரூ. 29 செலவிடப்படுகிறது. அதன்படி, சாதாரண நாள்களில் ரூ.87 ஆயிரத்தையும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.1.45 லட்சத்தையும் கோயில் நிா்வாகம் செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com