3 மாதங்களில் வேலூருக்கு விமானப் போக்குவரத்து

விமான நிலையத்துக்கான சாலைப் பகுதியை ஒப்படைக்க மாநில நெடுஞ்சாலைத் துறை ஒப்புதல் அளித்துள்ளதால், அடுத்த 3 மாதங்களுக்குள் விமான நிலையப் பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


வேலூர்: விமான நிலையத்துக்கான சாலைப் பகுதியை ஒப்படைக்க மாநில நெடுஞ்சாலைத் துறை ஒப்புதல் அளித்துள்ளதால், அடுத்த 3 மாதங்களுக்குள் விமான நிலையப் பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வேலூரில் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக இருந்த அப்துல்லாபுரம் - ஆலங்காயம் சாலையின் ஒருபகுதியை விமான நிலையங்கள் ஆணையத்துக்கு ஒப்படைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து விமான நிலைய பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த 3 மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளையும் முடித்து விமான நிலையத்தை செயல்படுத்திட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ், வேலூர் அருகே அப்துல்லாபுரத்திலுள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டு கடந்த 2018ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதில், ஏற்கெனவே ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட 760 மீட்டர் நீளமுடைய ஓடுதளத்தை 800 மீட்டராக அதிகரித்து தார் சாலைகள் அமைத்தல், விமான முனையம், பயணிகள் அறை, உணவகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அடங்கிய கட்டடங்கள், விமானங்கள் வந்து செல்வதற்குத் தேவையான சிக்னல் மையம் ஆகியவை அமைக்கும் பணிகளும் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

எனினும், விமான நிலையத்துக்கு மத்தியில் செல்லும் மாநில நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான அப்துல்லாபுரம் - ஆலங்காயம் சாலையின் 775 மீட்டர் பகுதியை விமான நிலையத்துக்கு ஒப்படைப்பதில் கடந்த பல மாதங்களாக இழுபறி நீடித்து வந்தது. இதனால், விமான நிலையப் பணிகள் முழுமை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. பல மாதங்களாக நிலவி வந்த இப்பிரச்னைக்கு இம்மாத தொடக்கத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்வு காணப்பட்டது. 

இதில், வேலூர் விமான நிலையம் வழியாகச் செல்லும் மாநில நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை விமான நிலையத்துக்கு ஒப்படைக்கவும், அதற்கு மாற்றாக விமான நிலைய சுற்றுப்புறத்தின் அருகிலேயே ஒரு தற்காலிக மாற்றுச் சாலை அமைக்க தேவையான இடத்தை விமான நிலையங்கள் ஆணையம் ஒதுக்கிடவும் முடிவு செய்யப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, முதற்கட்டமாக மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு தேவையான மாற்று சாலைக்கான இடத்தை விமான நிலையங்கள் ஆணையம் அளவீடு செய்து ஒதுக்கியுள்ளது. அந்த இடத்தில் சாலை அமைக்க ரூ.1.70 கோடிக்கு திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு நெடுஞ்சாலைத் துறை சார்பில் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களுக்குள் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன், சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். 

இந்த மாற்று சாலை அமைக்கும் அதேசமயத்தில் விமான நிலையத்துக்கு ஒப்படைக்க வேண்டிய அப்துல்லாபுரம் - ஆலங்காயம் சாலையின் ஒருபகுதி ஒப்படைக்கப்படும் என்றார் மாநில நெடுஞ்சாலைத்துறையின் வேலூர் கோட்ட பொறியாளர் சரவணன்.

அவ்வாறு விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்குத் தேவையான அப்துல்லாபுரம் - ஆலங்காயம் சாலையின் ஒருபகுதி கிடைக்கப் பெற்றவுடன் அங்கு விமானங்கள் வந்து நிறுத்தப்படுவதற்கான கட்டமைப்புகள் அமைக்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டவுடன், அடுத்த 3 மாதங்களுக்குள் விமான நிலையங்கள் ஒழுங்கு முறை ஆணைய உரிமம் பெற்று விமான சேவை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com