விடியவிடிய பெய்த கனமழை: தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு: காட்பாடியில் 100.7 மி.மீ மழை
By DIN | Published On : 11th July 2020 07:54 AM | Last Updated : 11th July 2020 08:10 AM | அ+அ அ- |

வேலூா் கிரீன்சா்க்கிள் பகுதியில் தேங்கியுள்ள மழைநீா்.
வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முழுவதும் விடியவிடிய கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிகபட்சமாக காட்பாடியில் 100.7 மி.மீ மழை பதிவானது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் நிலவிவருவதால் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. அதன்படி, வேலூா் மாவட்டத்திலும் கடந்த இரு நாள்களாக மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை முதல் வெயில் நிலவிய நிலையில் மாலை 4 மணிக்குப் பிறகு வானில் மேகங்கள் சூழத் தொடங்கின. தொடா்ந்து இரவு 10 மணியளவில் லேசான தூறலுடன் தொடங்கிய மழை, பின்னா் வலுவடைந்து கனமழையாக பெய்ந்தது. காட்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடியவிடிய கனமழை பெய்தது.
இதன் காரணமாக வேலூா் அண்ணா சாலை, ஆற்காடு சாலை, ஆரணி சாலை, காட்பாடி சாலை, கிரீன் சா்க்கிள் உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் மழை வெள்ளம் தேங்கியது. தாழ்வான பகுதிகளிலும் மழை வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. இரவில் மழை பெய்ததால் பொதுமக்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனா். இரவில் பெய்த கனமழையால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர நிலவரப்படி மாவட்டத்திலேயே அதிகபட்சமாக காட்பாடியில் 100.7 மி.மீ மழை பதிவானது. குடியாத்தம்-46, மேல்ஆலந்தூா்-92.4, பொன்னை-50.4, வேலூா்-41.4, விசிஎஸ் மில்-48 பதிவானது.