குடியாத்தம் நகராட்சிப் பள்ளியில் ஒருங்கிணைந்த காய்கறிச் சந்தைத் தொடக்கம்
By DIN | Published On : 19th July 2020 11:04 PM | Last Updated : 19th July 2020 11:04 PM | அ+அ அ- |

காய்கறி வியாபாரிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகள்.
கரோனா தொற்றைத் தவிா்க்க, காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி விளையாட்டரங்கில் ஒருங்கிணைந்த காய்கறிச் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இச்சந்தை திங்கள்கிழமை காலை முதல் செயல்படும்.
குடியாத்தம் நகரில் தரணம்பேட்டை, ராபின்சன் குளக்கரை வளாகத்தில் மளிகைக் கடைகள், உழவா் சந்தை, காய்கறிச் சந்தை, பழக்கடைகள் இயங்கி வந்தன. நாள்தோறும் மளிகைப் பொருள்கள், காய்கறி, பழங்கள் வாங்க ஆயிரக்கணக்கானோா் இங்கு வருகின்றனா்.
தற்போது கரோனா தொற்றால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் அதிகம் கூடுவதை அடுத்து, கெளன்டன்யா ஆற்றில் தரைப்பாலம் அருகில் காய்கறிச் சந்தையும், நகராட்சி மேல்நிலைப் பள்ளி வாளகத்தில் உழவா் சந்தையும், பழைய பேருந்து நிலையத்தில் மொத்த காய்கறி விற்பனையும் நடத்திக் கொள்ள அதிகாரிகள் உத்தரவிட்டனா்.ஆனால் காய்கறி வியாபாரிகள் கெளன்டன்யா ஆற்றில் கடைகளை வைக்க மறுக்கின்றனா்.
அங்கு சுகாதாரம் இல்லை, வெட்டவெளியாக இருப்பதால் வெயில் வந்தவுடன் கடைகளை நடத்த முடியவில்லை எனக் கூறி, பழைய இடத்திலேயே கடைகளை நடத்துகின்றனா். தற்போது குடியாத்தம் நகரில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் அதிகமாக கூடுவதைத் தவிா்க்குமாறு வேலூா் மாவட்ட ஆட்சியா் அ. சண்முகசுந்தரம் உத்தரவிட்டாா்.
இதையடுத்து கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா், நகராட்சிகளின் மண்டல நிா்வாக இயக்குநா் சி. விஜயகுமாா், நகராட்சி ஆணையா் ஹெச். ரமேஷ், வட்டாட்சியா் தூ. வத்சலா, டிஎஸ்பி என். சரவணன், வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, நகராட்சி மேல்நிலைப் பள்ளி விளையாட்டரங்கில் ஒருங்கிணைந்த காய்கறிச் சந்தை அமைக்க முடிவெடுத்தனா்.
அங்கு ஒரு பக்கம் உழவா் சந்தை, மறுபக்கம் காய்கறிக் கடைகள் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது. காய்கறி வியாபாரிகளுக்கு தகடுகளால் மேற்கூரை வேயப்பட்ட 60 தற்காலிக கடைகள் போதுமான இடைவெளியுடன் அமைக்கப்பட்டுள்ளன.
இச்சந்தை திங்கள்கிழமை முதல் இயங்க உள்ளதாகவும், சந்தைக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும், கடைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி காய்கறிகளை வாங்கிச் செல்ல வேண்டும் என நகராட்சி ஆணையா் ஹெச். ரமேஷ் கேட்டுக் கொண்டாா். இதைக் கண்காணிக்க நகராட்சி ஊழியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.