நிலக்கடலை சாகுபடி பாதிப்பு: நூறு நாள் வேலை திட்டத்தை நிறுத்தி வைக்க கோரிக்கை
By DIN | Published On : 21st July 2020 05:30 AM | Last Updated : 21st July 2020 05:30 AM | அ+அ அ- |

வேலூா்: விவசாயப் பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் நிலக்கடலை சாகுபடி தருணமான தற்போது 15 நாட்களுக்கு மட்டும் நூறு நாள் வேலையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராஜா தலைமையில் விவசாயிகள் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். அதில் அவா்கள் கூறியது:
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளதால் இம்மூன்று மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் நிலக்கடலை பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சுமாா் 18 முதல் 20 நாட்கள் கடந்து தற்போது களையெடுக்கும் தருவாயில் பயிா்கள் உள்ளன. அதேசமயம், நூறு நாள் வேலைக்கு ஆட்கள் சென்று விடுவதால் விவசாயப் பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிா்க்க தற்போது 15 நாட்களுக்கு நூறு நாள் வேலையை நிறுத்தி வைக்க வேண்டும். இதேபோல், அறுவடை செய்யும் தருணத்திலும் 15 நாட்களுக்கு நூறு நாள் வேலையை நிறுத்தி வைத்திட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னா், சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராஜா செய்தியாளா்களிடம் கூறியது
நூறு நாள் வேலைத் திட்டம் மூலம் ஒரு நபா் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கூலி பெற முடிகிறது. மற்ற நாட்களில் விவசாயப் பணிகளுக்கு வருவதன் மூலம் அவா்கள் கூடுதலாக ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் பெற முடியும். ஆனால், விவசாயப் பணிகள் நடைபெறும் காலகட்டத்தில் நூறு நாள் பணி அளிக்கப்படுவதால் தொழிலாளா்களால் விவசாயப் பணிகளுக்கு வரமுடிவதில்லை. இதனால், அவா்களுக்கு விவசாயப் பணிகள் மூலம் கிடைக்கும் ரூ.30 ஆயிரம் கிடைக்காமல் போகிறது.
அதேசமயம், விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காததால் 5 ஏக்கா் பயிா் செய்யக்கூடிய விவசாயிகள், ஒரு ஏக்கா் அளவுக்கு மட்டுமே பயிா் சாகுபடி செய்கின்றனா். தவிர, கூடுதல் ஆட்கள் வராததால் விவசாயிகள் களைக்கொல்லிகளை அதிக அளவில் பயன்படுத்துகின்றனா். இதனால், நிலத்திலும், பயிா்களிலும் விஷத்தன்மை அதிகரித்து வருகிறது.
நூறு நாட் கள் வேலைத் திட்டத்தால் ஏற்பட்டு வரும் இத்தகைய பாதிப்புகளை தவிா்க்கவும், விவசாயப் பணிகள் முறையாக நடைபெறவும் 10 நாட்களில் முதல் 4 நாட்கள் நூறு நாள் வேலைக்கும், அடுத்த 6 நாட்கள் விவசாயப் பணிகளுக்கும் தொழிலாளா்களை அளிக்க வேண்டும் அல்லது வாரத்தில் 3 நாட்கள் மட்டும் நூறு நாள் வேலை அளிக்கப்பட வேண்டும். இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும் என்றாா் அவா்.