வேலூரில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
By DIN | Published On : 21st July 2020 03:36 AM | Last Updated : 21st July 2020 03:36 AM | அ+அ அ- |

வேலூா்: வேலூரில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
வேலூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் கடைகள், கிடங்குகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக புகாா்கள் வந்தன. இதைத் தொடா்ந்து, நெடுஞ்சாலைகளில் நிலவும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேலூா் கோட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டிருந்தாா்.
அதன்படி, வேலூா் கோட்ட நெடுஞ்சாலை பொறியாளா் சரவணன் தலைமையில் அதிகாரிகள் வேலூா் பெங்களூா் சாலையில் மாங்காய் மண்டி அருகில் இருந்து கொணவட்டம் வரை சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த மூங்கில் விற்பனைக் கடைகள், இரும்புக் குடில்கள், கட்டடங்கள் ஆகிய ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.
அசம்பாவிதங்களைத் தவிா்க்க காவல் துணைக் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு, வடக்கு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். விதிமுறைகளை மீறி நெடுஞ்சாலைகளை ஆக்கிமிப்பு செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.