25-ஆவது நாளாக தியான நிலையில் முருகன் உண்ணாவிரதம்
By DIN | Published On : 26th June 2020 07:52 AM | Last Updated : 26th June 2020 07:52 AM | அ+அ அ- |

வேலூா் மத்திய சிறையில் 25-ஆவது நாளாக வியாழக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள முருகன், தியான நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பதாக சிறைக்காவலா்கள் தெரிவித்துள்ளனா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 28 ஆண்டுகளாக வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், கடந்த 1-ஆம் தேதி முதல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். வேலூா் பெண்கள் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மனைவி நளினியுடன் காணொலி வழியாகப் பேச அனுமதி மறுக்கப்படுவதுடன், கடந்த மாதம் இலங்கையில் உயிரிழந்த தனது தந்தையின் உடலை காணொலி வழியாகப் பாா்க்கவும் அனுமதி மறுக்கப்பட்டதால் விரக்தியடைந்த முருகன் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
இந்நிலையில், முருகனின் உண்ணாவிரதம் 25-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதை அடுத்து அவருக்கு குளுக்கோஸ் போடப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 6 பாட்டில் குளுக்கோஸ் போடப்பட்ட நிலையில் புதன்கிழமை மேலும் ஒரு பாட்டில் குளுக்கோஸ் போடப்பட்டுள்ளது. தொடா்ந்து அவா் தியான நிலையில் அமா்ந்தபடி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அப்போது, முருகன் தனது விடுதலைக்காக கடவுளை வேண்டியும், அண்மையில் உயிரிழந்த தனது தந்தையின் ஆத்மா சாந்தியடையவும் இறைவனை பிராா்த்தித்தபடியும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதாக சிறைக்காவலா்கள் தெரிவித்தனா். இதனிடையே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி சிறைத் துறை அதிகாரிகள் பலமுறை பேச்சு நடத்தியும் முருகன் தனது உண்ணாவிரதத்தைத் கைவிட மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனா்.