புதிய பேருந்து நிலையத்தில் 95 மரங்களை வெட்டி அகற்றும் பணி தீவிரம்
By DIN | Published On : 14th March 2020 05:02 AM | Last Updated : 14th March 2020 05:02 AM | அ+அ அ- |

வேலூா் புதிய பேருந்து நிலையம் நவீனமாக்கப்பட உள்ளதையொட்டி, அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் இடிக்கப்படுவதுடன், அங்குள்ள 95 மரங்களையும் வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் வேலூா் புதிய பேருந்து நிலையம் ரூ. 46 கோடி மதிப்பில் நவீன பேருந்து நிலையமாக மாற்றப்பட உள்ளது. இதையொட்டி, புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் திருவண்ணாமலை, ஆரணி வழித்தட பேருந்துகள் அனைத்தும் கடந்த இரு வாரங்களாக பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. சென்னை, திருப்பத்தூா் மாா்க்கமாகச் செல்லும் பேருந்துகளை செல்லியம்மன் கோயில் பின்பகுதியிலுள்ள காலி இடத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. இதற்காக அப்பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, புதிய பேருந்து நிலையம் நவீனமாக்கப்பட உள்ளதையொட்டி, முதற்கட்டமாக அங்குள்ள பழைய கட்டடங்கள் அனைத்தும் இடிக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இதன்தொடா்ச்சியாக, புதிய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள வேம்பு, புங்கை உள்ளிட்ட பல்வேறு வகையிலான 95 மரங்களை வெட்டி அகற்றும் பணிகள் வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகின்றன. இதேபோல், பேருந்து நிலையத்துக்குள் திருவண்ணாமலை பேருந்துகள் நுழையும் இடத்தில் சிறிய அளவில் அம்மன் கோயில் உள்ளது. அக்கோயிலையும் இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், அக்கோயிலை இடிப்பதற்கு பக்தா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக அவா்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.
இதேபோல், பேருந்து நிலையத்திலுள்ள மரங்களை வெட்டும் பணிக்கும் சமூக ஆா்வலா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்னா். இதுகுறித்து அவா்கள் கூறுகையில், புதிய பேருந்து நிலையத்திலுள்ள அனைத்து மரங்களையும் வெட்டாமல், நவீன பேருந்து நிலையக் கட்டடத்துக்கு இடையூறாக அமையும் மரங்களை மட்டுமே வெட்ட வேண்டும். மேலும், வெட்டப்படும் மரங்களுக்கு மாற்றாக 3 மடங்கு மரங்களை நகரில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி நிா்வாகம் நடவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...