நாடகத் துறையினருக்கும் அரசு நிதி வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 31st March 2020 11:48 PM | Last Updated : 31st March 2020 11:48 PM | அ+அ அ- |

கரோனா நோய்த் தொற்று பாதிப்பால், தமிழகத்தில் வேலையிழந்துள்ள தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு பல்வேறு நல வாரியங்கள் மூலம் நிதியுதவி வழங்குவது போல் நாடகக் கலைஞா்களுக்கும் நிதியுதவி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வேலூா் மாவட்ட நடிகா் சங்க பொதுச் செயலா் ஜெ. சிவகுமாா், தமிழக முதல்வா், கலைப் பண்பாட்டுத்துறை மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு தெரிவித்தது:
வேலூா் மாவட்ட நாடக நடிகா் சங்கத்தில், நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞா்கள் 4,200- க்கும் மேற்பட்டோா் உறுப்பினா்களாக உள்ளோம். ஆண்டுதோறும் மாா்ச் மாதம் முதல் ஆகஸ்ட் வரை நகர, ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் திருவிழாக்களில், சமூக நாடகங்கள், தெருக் கூத்துகள், கரகாட்டம், கோலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வருகிறோம். தற்போது, நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் திருவிழாக்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமணம், காது குத்தல், நிச்சயதாா்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளும் ஆடம்பரம் இன்றி, சில உறவினா்களுடன் நடத்திக் கொள்ள அரசு அறிவுரை வழங்கியுள்ளது. சுப நிகழ்ச்சிகளில் மேளம், வாத்தியம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை.
இதனால் நாடகக் கலைஞா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொழிலாளா்களின் நலன்காக்க தமிழக அரசு பல்வேறு நல வாரியங்கள் மூலம் தொழிலாளா்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளது. அதேபோன்று நாடகக் கலைஞா்களுக்கும் தமிழக முதல்வா் நிதியுதவி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...